தேதி மாற்றி மாற்றி ஜீன் 7ம் தேதி காலா ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடையில் இந்த வெளியீட்டுத் தேதியும் மாற்றப்படும் என்று ஒரு தகவல் பரவியது. “தூத்துக்குடி கலவர நிலவரத்தால் ஜூலை மாதத்துக்கு வெளியீட்டுத் தேதி மாற்றப்படும்” என்று சொல்லப்பட்டது.

ஆனால் படத்தின் தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ், “ஜூன் 7ம் தேதி ரிலீஸ்” என்பதை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே நேற்று வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் ரசிகர்களின் மனதில் எழுந்திருக்கும் கேள்வி, “டிக்கெட் விலை எவ்வளவு” என்பதுதான்.

இதற்கு முன் வெளியான ரஜினியின் “கபாலி” படத்துக்கு டிக்கெட் விலை ஏகத்துக்கு அதிகரிக்கப்பட்டிருந்தது தெரிந்த விசயம்தான். மொத்தமாக, ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்காக சிறப்புக்காட்சி என்று ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகளின் விலை 3000 வரை சென்றது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததும், சில தியேட்டர்களில் ரசிகர்கள் ரகளை செய்ததும் நடந்தது.

இந்த முறை (காலாவுக்கு) டிக்கெட் விலை எப்படி இருக்கும்?

படக்குழு தரப்பில் விசாரித்தபோது, “இந்த முறை டிக்கெட் விலையில் ரஜினி கவனமாக இருக்கிறார். சிஸ்டம் சரியில்லை என்று அவர் தமிழக நிர்வாகத்தை குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், தனது படத்தின் டிக்கெட் விலையிலும் சிஸ்டம் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே தியேட்டர்களில் டிக்கெட் விலை என்பது அரசு நிர்ணயித்த அளவிலேயே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்” என்கிறார்கள்.

ஆனால் நம்மிடம் பேசிய விநியோகஸ்தர் ஒருவர், “கபாலி படம் அளவுக்கு காலாவுக்கு எதிர்பார்ப்பு இல்லை. கபாலி பட தயாரிப்பாளர் தாணு, மார்க்கெட்டிங் யுக்தியில் கெட்டிக்காரர். விமானத்தில் விளம்பரம், வெளிநாட்டில் பாடல் வெளியீடு என்றெல்லாம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஏதோ கபாலி படம் பார்க்கவில்லை என்றால் அது குற்றமாகிவிடும் என்று மக்கள் நினைக்கும்படி செய்தார்.

ஆகவே மிக அதிக விலைக்கு கார்பரேட் ஊழியர்களுக்கு கபாலி டிக்கெட்டுகளை லம்பாக விற்றார்.

ஆனால் காலா படத்துக்கு அது போன்ற மார்க்கெட்டிங் யுக்திகள் செய்யப்படவில்லை. செய்தி சில மார்க்கெட்டிங் யுக்திகளும் எடுபடவில்லை. ஆகவே கபாலி அளவுக்கு விலை அதிகமாக இருக்காது.

ஆனாலும் காலா வெளியாகி முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு டிக்கெட் விலை அதிகமாகத்தான் விற்பார்கள்” என்றார்.

ராமானுஜம்

திரைப்பட ஆய்வாளர் ராமானுஜமும் இதே கருத்தைச் சொல்கிறார். மேலும் அவர், “ரஜினி பட வெளியீட்டுக்குப் பிறகு இரண்டு வாரம் வேறு படங்கள் வெளியாகாது.  ஆனால் இந்த முறை அப்படி அல்ல. காலா படம் வெளியானல் அடுத்து வாரம் கோலிசோடா படம் வெளியாகிறது. அதற்கு அடுத்த வாரம் டிக் டிக் டிக் படம் வெளியாகிறது. ஆக, காலாவை பார்த்து மற்ற தயாரிப்பாளர்கள் பயப்படவில்லை. அதாவது பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லை” என்கிற ராமானுஜம், “அதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் டிக்கெட் விலை இருக்கும் என்று சொல்ல முடியாது. கபாலி அளவுக்கு இல்லாவிட்டாலும் காலா டிக்கெட்டும் விலை அதிகமாகத்தான் முதல் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு விற்கப்படும். ஏனென்றால் படத்தை அந்த அளவுக்கு விநியோகஸ்தர்களிடம் விற்றிருக்கிறார்கள்” என்கிறார்.

மேலும் ராமானுஜம், “காலா படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை வாங்குவதற்கு ஒரு பெரிய நிறுவனம் முன்வந்தது. 46 கோடி ரூபாய் அளிப்பதாகச் சொல்லி அட்வான்ஸாக 25 கோடி தருவதாகவும் கூறியது. ஆனால் விலை குறைவு என்று ரஜினி மறுத்துவிட்டார்.

ஆனால் வழக்கமாக ரஜினி படத்துக்கு விநியோகஸ்தர்களிடம் இருக்கும் போட்டி காலாவுக்கு இல்லை. இதைத் தாமதமாக உணர்ந்த ரஜினி, 46 கோடிக்கு வாங்க விரும்பியவரைத் தேட.. அந்த நபரோ நிலைமையை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஏரியாக்கள் மட்டும் விற்பனை ஆகியிருக்கிறது. அதாவது விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள். மற்ற பகுதிகளுக்கு பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது” என்ற ராமானுஜம், “சிஸ்டம் சரியில்லை என்று சொல்லி சரி செய்வதற்காக அரசியலுக்கு வருவதாக பேசி வருகிறார் ரஜினி. தனது படத்தில் இருந்தே சிஸ்டத்தை சரியாக செயல்பட வைக்க முயன்றிருக்கலாம்.

காலா என்பது ரஜினியின் படம்தான். தனுஷ் தயாரிப்பாளர் என்றாலும் வருமானம் ரஜினி குடும்பத்துக்குத்தான் போகிறது. ஆகவே, தானே தமிழ்நாடு முழுதும் ரிலீஸ் செய்து, அரசு நிர்ணயித்த கட்டணத்தை தியேட்டர்களில் வசூல் செய்திருக்கலாம். ஆனால் ரஜினிக்கு மனமில்லை” என்கிறார் ராமானுஜம்.

எப்படியானாலும் காபாலி அளவுக்கு மிக அதிக அதிகத் தொகைக்கு டிக்கெட் விற்கப்படாது என்றாலும், காலா டிக்கெட்டும் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு கிடைக்காது என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிதான் சிஸ்டத்தை சரி செய்து, உரிய கட்டணத்தில் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!