சென்னை

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இன்னும் பார் கவுன்சில் அதிகாரம் தரப்படவில்லை என தகவல் வந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மே மாதம், தருமபுரி, விழுப்புரம் மற்றும் ராமநாதபுரத்தில் அரசு சட்டக் கல்லூரி துவங்கப்படும் என அறிவித்திருந்தார்.  இந்த கல்வியாண்டில் இருந்து இயங்கி வரும் இந்தக் கல்லூரிகளில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தலா 80 மாணவர்களை சேர்த்துள்ளது.

சட்டக்கல்லூரி தொடங்குவதென்றால் அது அரசானாலும் சரி, தனியார் ஆனாலும் சரி இந்திய பார் கவுன்சிலில் அங்கீகாரத்தை முதலில் பெற வேண்டும்.  பார் கவுன்சில் சட்டக் குழு இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.   அந்த அறிக்கையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழு கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும்.

முதலில் கட்டிடம், மற்றும் பிற கட்டமைப்புகளைப் பொறுத்து, 2 அல்லது 3 அல்லது 5 ஆண்டுகள் அங்கீகாரம் அளிக்கப்படும்.   இந்த ஆண்டுக் காலம் முடிந்த பின் இந்த அங்கீகாரம் மீண்டும் புதிப்பிக்க வேண்டும்.   அங்கீகாரம் அளிக்கப்பட்ட கல்லூரிகளில் பயின்று பட்டம் பெறும் மாணவர்கள் மட்டுமே பார் கவுன்சிலில் பதிந்து வழக்கறிஞராக பணி ஆற்ற முடியும்.   தமிழக அரசின் புதிய 3 சட்டக் கல்லூரிகளுக்கும் இதுவரை அங்கீகாரம் பெறப்படவில்லை எனவும்  மேலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் சில கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் புதிக்கப்படவில்லை என செய்தி வந்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பார் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான கார்வேந்தன், “சட்டக் கல்லூரி துவங்க அவசியம் அங்கீகாரம் பெற வேண்டும்.  ஒரு மாநில அரசே அங்கீகாரம் பெறாமல் துவங்குவதை அனுமதிக்க முடியாது.  தனியார் கல்லூரிகளில் அங்கீகாரம் உடனடியாக பெறப் படுகிறது.   ஆனால் பல ஏழை மாணவர்கள் பயிலும் அரசு கல்லூரிகள் இந்த அங்கீகாரம் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை.” என கூறி உள்ளார்.

இது குறித்து பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, “தமிழகத்தில் தற்போது தொடங்கி உள்ள மூன்று சட்டக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கோரி எந்த விண்ணப்பமும் இது வரை வரவில்லை.  அங்கீகாரம் பெறாத இது போன்ற சட்டக் கல்லூரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்படும்.   அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.  விளக்கம் திருப்தி அளிக்காவிடில் அந்த கல்லூரிகள் மூடப் படும்.   அதில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பார் கவுன்சிலில் பதிய முடியாது.   ஏற்கனவே மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் 3 அரசு கல்லூரிகளை மூடி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.