500, 1000 நோட்டை தடை செய்தவுடனேயே, “புதிய பாரதம் பிரந்தது.. பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” என்று நடிகர் ரஜினி முதற்கொண்டு பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

அதுமட்டுமல்ல…

“புதிதாக அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ். சிப் இருக்கிறது. அந்த நோட்டை கருப்புப்பண முதலைகள் எங்கு ஒளித்துவத்தாலும் செயற்கைக்கோள் மூலம் பார்த்து கண்டுபிடித்து கருப்புப்பணத்தை ஒழித்தே விடுவார்” என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் ஏதேதோ சொல்லி மக்களை அசரடித்தார்கள்.

ஆனால் இந்த நோட்டுத் தடையால் மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஏ.டி.எம். மற்றும் வங்கி வாசலில் நீண்ட கியூவில் கால் கடுக்க நின்று கதறினார்கள் மக்கள். சிலர் மாண்டுபோனதும் நடந்தது.

ஒருவழியாக கொஞ்சம் கொஞ்சமாக பணப்புழக்கம் இயல்புக்கு வந்தது.  ஆனால் நோட்டுத்தடையால் ஏற்பட்ட பொருளாதார, தொழில் பாதிப்புகளின் விளைவுகள் இன்னும் முழுமையாக சீரடைந்தபாடில்லை.

இந்த நிலையில், புதிதாக அறிமுகப்படுத்திய 2000 ரூபாய் நோட்டையும் மத்திய அரசு தடை செய்யப்போகிறது என்ற யூகச் செய்திகள் பரவியது. மக்கள் பதறினார்கள்.

இதற்கு கடந்த மார்ச் மாதம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதில் அளித்தார்.

“2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை” என்றார்.

ஆனால் சமீபத்தில் மீண்டும் அதே யூகச் செய்திகள் பரவியிருக்கின்றன.

இந்த முறை யூகச் செய்தி என்றுகூட சொல்லமுடியாது, கிட்டதட்ட உறுதிப்படுத்தப்பட்ட செய்தி என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால், “2,000 ரூபாய் நோட்டை அச்சிட வேண்டாம்”  என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த நோட்டை தடை செய்யப்போவது உறுதி என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில்  “ 2,000 ரூபாய் நோட்டை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறதா?” ‘ என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவையில் இருந்தும், இந்த கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.

மௌனத்தை மட்டுமே பதிலாக அளித்தார். இதனால் மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை வரலாம், 2,000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறலாம் எனத் தகவல்கள் உலவுகின்றன.

பிரதமர் மோடியின் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில், `வேலைவாய்ப்பு குறைந்துள்ளது; விலைவாசி உயர்ந்துள்ளது, உற்பத்தி தேய்ந்துவிட்டது, வியாபாரம் முடங்கிவிட்டது, விலைவாசி விண்ணை முட்டுகிறது, கார்ப்பரேட்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ஆனால், கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். ஏன், விவசாயிகள் கடனைக்கூட தள்ளுபடி செய்ய மறுக்கப்படுகிறது என ஏராளமான பிரச்னைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதே நேரத்தில் விஜய்மல்லையா மற்றும் லலித்மோடி  போன்ற பெரும் ஊழல் பேர்வழிகள் தப்பித்துவிடுகின்றனர். ஆனால், வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்சத்தொகை இருப்பு இல்லையெனில் கட்டணம்; ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம், என்று மக்கள் துயருருகிறார்கள்.

பணமதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பண முதலைகள் சிக்குவார்கள் என்றார்கள். ஆனால் எளிதாக புது நோட்டுக்கு மாறிவிட்டார்கள் கருப்பு பண முதலைகள். பொதுமக்கள்தான் தவிக்கிறார்கள்.

பொருளாதார நிபுணர்கள், “பணமதிப்பு நீக்கத்தை அடுத்து இதுவரை என்ன பொருளாதார மாற்றம் நடைபெற்றுள்ளது என்பதை மத்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இதிலிருந்தே பணமதிப்பு நீக்கம்  மிகப்பெரிய தோல்வி என்பதை உணரலாம்.

2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் வாய்ப்பு குறைவு. அப்படி மீண்டும் செய்தால் அரசின் மீது இருந்த நம்பிக்கை  மக்களுக்கு போய்விடும்” என்கிறார்கள்.