சிக்கலில் ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் – இந்திய வங்கிப் பணிகள் முடங்குமா?

புதுடில்லி: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் என்ற பெயருடைய நிறுவனம், இந்தியாவில் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளதால், இந்திய வங்கிப் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், தொலைதொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. இதனால், வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நிதிச் சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்த வரிசையில், இந்தியாவில், செயற்கைக்கோள் பிராட்பேண்டு சேவைகளை வழங்கிவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் நிறுவனமும், ரூ.600 கோடி பாக்கித் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிறுவனமானது, இந்தியாவில் பாதுகாப்பு, கல்வி மற்றும் வங்கி ஆகிய துறைகளுக்கு தேவையான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், நிறுவனத்தால் பாக்கித் தொகையை செலுத்த இயலாது என்றும், திவால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகவும், தொலைதொடர்பு துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்நிறுவனம் இந்தியாவில் அதன் சேவைகளை நிறுத்திக் கொள்ளுமானால், 70 ஆயிரம் வங்கி பகுதிகள், இந்திய கடற்படை, ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் செயற்கைக்கோள் பிராட்பேண்டு சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.