மது ‘உள்ளே’ சென்றவுடன் உடலில்  என்ன நடக்கிறது? ஏன் விபத்து ஏற்படுகிறது?

‘நாம் உண்ணும் உணவு சிறுகுடலால்  கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கின்றது.  இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கின்றது.

இவை மூன்றும் மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக மகிழ்ச்சி,  குழப்பம், நினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கின்றன.

இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் விபத்து நேர்கின்றது.

அதாவது குளியலறையிலோ வேறு இடங்களிலோ தடுமாறி விழுவது, வண்டி ஓட்டுகையில் கட்டுப்பாடு இழந்து விபத்து நேர்வது போன்றவை.

இதற்குக் காரணம் அதீத மதுவின்போது  நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுகிறது.

உதாரமமாக வண்டி ஓட்டும்போது எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருக்கும். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறோம்.

எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்ட காரணம் இதுதான். ஆகவேதான் விபத்து நடந்துவிடுகிறது.

மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.  இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் (மது) அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள்அதிகமாகச் செயல்படுவார்கள். காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும்.

ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணமாகிவிடும்.

மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.

ஆகவே முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்… போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதம் ஏற்படும்.

அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!

ஏற்கெனவே சொன்னது போல, வாகனம் ஓட்டும்போதுமட்டுமல்ல… சாதாரணமாக நடக்கும்போது மது குடித்தவர் தள்ளாடுவதும் இதுதான் காரணம்.

ஆகவே மதுவில் எச்சரிக்கை தேவை.

கார்ட்டூன் கேலரி