பிரதமர் மோடி தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் : ஊகங்களின் ஆய்வு

டில்லி

பிரதமர் மோடி இந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் என்பது குறித்த  ஊகம் குறித்த ஆய்வு

அடுத்து அமையப்போகும் ஆட்சியைக் குறித்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை எதையும் சொல்ல முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.   முடிவுகள் தெரிய இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் முடிவுகள் குறித்த ஊகங்கள் பல ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.  இந்த ஊகங்கள் குறித்த விவரங்களை இங்க் காண்போம்.

சென்ற முறை இருந்ததைப் போல் தற்போது பந்தய சந்தையில் மோடி வெற்றி பெறுவார் என பந்தயம் கட்ட நிறைய மக்கள் முன் வரவில்லை.   பாலகோட் தாக்குதலின் போது இருந்த அளவுக்கு தற்போது பாஜகவுக்கு ஆதரவு இல்லை.   பாஜக தலைவர் ராம் மாதவ் தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கூட்டணிக் கட்சிகளில் பல கட்சிகள் எதிர் அணிக்கு சென்றுள்ளன.  கூட்டணியில் உள்ள கட்சிகளும் அதிருப்தியுட்ன உள்ளன.   மோடி வெற்றி பெறுவார் என்னும் நம்பிக்கையில் அல்லது பயத்தில் மட்டுமே இக்கட்சிகள் கூட்டணியில் உள்ளன.   தற்போதுள்ள கட்சி பலத்தில் மோடியால் சுமார் 200 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும்.   ஆனால் அதைக் கொண்டு தனியாக ஆட்சி அமைக்க முடியாது.

கூட்டணி கட்சிகளின் மூலம் மோடி மீண்டும் ஆட்சியை அமைப்பது அவருக்கோ கட்சிக்கோ தோல்வி இல்லை என்றாலும் மோடியின் பெருமைக்கு பெரும் தோல்வியாக அமையும்.   அத்துடன் இந்த கணக்கு தவறாகி மோடியால் 175 இடங்கள் மட்டும் வெல்ல முடிந்தால் அது எதிரணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அளிக்கும்.   பாஜகவின் கூட்டணி கட்சிகளும் அப்போது தங்கள் ஆதரவை மாற்றிக் கொள்ளும்.

பங்குச் சந்தையில் மோடியின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதால் மோடி தோல்வி அடைந்தால் அது பங்குச் சந்தையை  பாதிக்கும் என சொல்லப்படுகிறது.   ஆனால் அது எந்த அளவுக்கு சரி என்பதை யாரும் சொல்ல முடியாது.   முதலீட்டாளர்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு மாறுவார்களே தவிர முதலீட்டை திரும்ப பெற மாட்டார்கள்.

கடந்த 2004 ஆம் வருடம் வாஜ்பாய் தோல்வி அடைந்து காங்கிரஸ் பதவி ஏற்றதும் பங்குச் சந்தையில் 20% வீழ்ச்சி அடைந்தது.  ஆனால் ஆறே மாதத்தில் அது மீண்டும் வளர்ச்சியை நோக்கி பயணித்தது.    முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீட்டை அதிகரித்தனர். அதே நிலை தற்போதும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி தோல்வி அடைந்து வெளியேறினால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது.   ஆனால் மோடியின் ஆட்சியில் ஏற்கனவே பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலையாகும்.  அவர் தனது வாக்குறுதிகள் எதையும் நிறவேற்றாததே இதன் முக்கிய காரணம் ஆகும்.   அது மட்டுமின்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மற்றொரு காரணம் ஆகும்.   தற்போதுள்ள நிலையில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் பொருளாதார சீர்திருத்தத்துக்கு கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது.

சமுதாய அளவில் கும்பல் கொலைகள் அதிகரித்தது மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.    அந்த காயம் ஆற வெகு நாட்கள் ஆகும்.  வெறுப்பு அரசியல் மோடியின் தோல்வியால் மறைய வாய்ப்புள்ளது.   இவ்வாறு நேர வேண்டும் எனில் மாற்று  அரசு அமையும் போது அதன் செயல்பாடுகள் சமுதாய நலனை நோக்கி இருத்தல் வேண்டும்.

பாஜகவின் எதிர்காலம் மோடியின் தோல்வியால் பாதிக்கப்படும் என ஒரு கருத்து உள்ளது.   குறிப்பாக அவர் கட்சி உத்திரப் பிரதேச மாநிலத்தில் தோல்வி அடைந்தால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வரும் 2022 ஆம் வருட தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்படும்.

இதிலும் பல கேள்விகள் அடங்கி உள்ளன.

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு இப்போது கட்சியில் உள்ள செல்வாக்கு இருக்குமா?

கடந்த 2001 முதல் பதவியில் இருந்த மோடியால் பதவி இன்றி இருக்க முடியுமா?

தனது குறைகளை அவர் உணர்ந்துக் கொண்டு செயல்படுவாரா?

இந்த கேள்விகளுக்கு ஆம் என விடை வந்தால் யோகிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புக்கள் குறையலாம்.

மேற்கண்ட ஊகங்கள் பலிக்குமா என்பது மே 23 ஆம் தேதி தெரிந்து விடும்.