இந்த தேர்தலும் ஒர்க்அவுட் ஆகவில்லை என்றால் பாமகவின் கதி?

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்குநாள் சூடேறி வருகிறது. இந்நிலையில், அரசியல் பார்வையாளர்கள் பலர், கூட்டணிகள் குறித்த பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.

மனைவியாலும், மச்சானாலும் வீணாய்போன தேமுதிகவுக்கு, இத்தேர்தல்தான் அநேகமாக கடைசித் தேர்தலாக இருக்கும் என்று சொல்லப்படும் கருத்து ஒருபக்கம் இருக்க, பாமக என்ற ஒரு கட்சியின் நிலை என்னவாக இருக்கும் என்ற கணிப்புகளையும் புறந்தள்ள முடியாது.

கடந்த 2006 வரை தாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று முஷ்டி மடக்க தெரிந்தவர்களுக்கு, அதன்பிறகான தேர்தல்கள் அத்தனையும் ஃபிளாப்தான்.

இடையில் தனியாக நின்று தங்களின் 5%+ வாக்கு வங்கியை நிரூபித்தார்கள் என்றாலும், அதை வைத்து ஒரு சட்டமன்ற இடத்தைக்கூட ஜெயிக்க முடியாத நிலைதான். கடந்த 1991ம் ஆண்டிலிருந்து பார்க்கையில், 2016 சட்டமன்ற தேர்தலில்தான் சட்டமன்றத்தில் அவர்கள் ‘0’ ஆனார்கள்.

கூட்டணி அமைப்பதில், தந்தைக்கும் மகனுக்கு முரண்பாடு நிலவுவதாக கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போதே வலுவான செய்திகள் கசிந்தன. அந்த முரண்பாடு இப்போதும் பெரியளவில் தலைதூக்கி இருப்பதாய் கூறப்படுகிறது.

இப்போதைய நிலையில், இடஒதுக்கீட்டுப் போராட்டம் என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து, தன்னை தற்காத்துக்கொள்ள ராமதாஸ் & கோ முயன்றாலும், சிஎன் ராமமூர்த்தி, காடுவெட்டி குருவின் குடும்பத்தினர், வேல்முருகன், வீரப்பன் மனைவி உள்ளிட்ட ஒரு பெரிய வன்னியர் பட்டாளமே அவருக்கு எதிராக முஷ்டி முறுக்கி நிற்கிறது. இவர்களுக்கு, எந்த வகையிலும் பதிலடி கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர் ராமதாஸ் குடும்பத்தினர்.

ஆக, சொந்த பலத்திலும் கரைசேர முடியவில்லை, சேரும் கூட்டணிகளும் தொடர்ந்து பல தேர்தல்களாக ஒர்க்அவுட் ஆவதில்லை. தேவையில்லாமல், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, ஸ்டாலினுக்கு சவால்விட்டு, அவரை பெரியளவில் உசுப்பேற்றியாகிவிட்டது. துரைமுருகன் போன்றவர்களால் பாமகவிற்கு சாதகமாக எதுவும் செய்ய முடியாத நிலை.

எனவே, இந்த 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் பாமக மண்ணைக் கவ்வினால், அதன் ஓட்டு சதவிகிதம் அப்படியே இருந்தாலும்கூட, அந்தக் கட்சியின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விக்குறியே..!