திருச்செந்தூர்:

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்செந்தூரில் பொதுமக்களிடையே பேசினார்.

அப்போது,  மக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன் என்று ஆவேசமாக பேசினார். நாளை நமதே என்பதை நிச்சயம்  நம்புங்கள் என்ற கமலஹாசன்,  நான் நேசிப்பது மக்களைத்தான். எனது எஞ்சிய வாழ்வு உங்களுக்காக மட்டும்தான் மக்கள் நீதிமய்யத்தின் நகர்வு ஒவ்வொரு நாளும் வலுத்துக் கொண்டு  வருகிறது என்றும் அவர் கூறினார்.

அதுபோல நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன். இப்போது மவுனத்தை கலைத்தேன். செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்று பேசியிருந்தார்,

க்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இதற்காக நேற்று முன்தினம்  சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, பின்னர் அங்கிருந்து காரில் குமரி மாவட்டம் நாகர்கோவில் சென்றார்.

நேற்று குமரி மாவட்டத்தில் பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு அங்கேயே தங்கினார்.

அதைத்தொடர்ந்து இன்று  காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு, வள்ளியூர், திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசி அந்த வழியாக திருச்செந்தூர் சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து  காயல்பட்டணம், ஆறுமுகநேரி, புன்னக்காயல் வழியாக ஏரல் பகுதிக்கு சென்று அங்கிருந்து தூத்துக்குடி செல்கிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருக்கிறார். அதைடுத்து இரவே நெல்லை திரும்பி அங்கு இரவு ஓய்வு எடுக்கிறார்.

அதைத்தொடர்ந்த நாளை காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிர குளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

பின்பு ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். 18-ந்தேதி பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.