நெட்டிசன்:

நந்தகுமாரன் அவர்களது முகநூல் பதிவு:

கேரளா மட்டுமல்ல இந்தியா முழுவதும் நாறிய ஒரு சம்பவம் கடந்த வாரத்தில் உண்டென்றால் அது கேரளா பாஜகவினரின் லஞ்ச ஊழல் தான்.

மருத்துவக் கல்லூரி ஒன்று அமைப்பதற்கான அனுமதி பெற்று தருவதாக ஹவாலா மூலமாக பாஜக தலைவர்களின் கையில் கொண்டு சேர்க்கப்பட்ட பணம். அனுமதிக்காக பேரம் பேசப்பட்ட தொகை ரூ.20 கோடி. ஆனால், முதற்கட்டமாக ஒரு முன்பணமாக வழங்கப்பட்ட தொகை ரூ.5.6 கோடி. பேசிய படி 5.6 கோடி ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரும் அனுமதி வாங்கி தரவில்லை என எஸ்.ஆர் கல்வி குழும சேர்மேன் ஷாஜி கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரனின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, அவர் கட்சிக்குள்ளேயே ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கிறார்.

அந்த விசாரணை கமிஷன் கேரள மாநில பாஜக செயலாளர் எம்.டி.ரமேஷ் மற்றும் வினோத் உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் பணம் வாங்கியதாகவும், ஆனால் அனுமதி பெற்றுத் தரவில்லை எனவும் அறிக்கையளித்தது.

இவ்வாறு உட்கட்சி விசாரணை கமிஷன் விவகாரமான அறிக்கையளிக்கவே, அதை தனது அலுவலக மேஜையின் அறைக்குள் பூட்டி வைத்துக் கொண்டார் மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன்.

ஆனால், காங்கிரஸை போன்றே கேரளா பாஜகவிலும் எண்ணற்ற கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லை. அதில் ஒரு கோஷ்டியின் கையில் இந்த அறிக்கை தட்டுப்படவே, அதனை நகல் எடுத்து ஏசியாநெட் சேனலுக்கும் கொடுத்து விட்டனர்.

ரூ.2000 க்கான கள்ள நோட்டு அடித்து சிக்கலில் ஆழ்ந்து போன கேரள பாஜகவிற்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப் போனது என்றே கூற வேண்டும்.

சொந்த கட்சியினராலாயே ஊடக விவதாங்களில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.  அதில் ஒன்று போலியாக ரசீது அடித்து பணம் வசூலித்து கொண்ட ஊழலும் சேரும்.

இவ்வாறு, கள்ள நோட்டு , லஞ்ச ஊழல், வசூலிப்பு ஊழல் என பலவகையிலும் பாஜகவின் பெயர் கேரள மக்கள் மத்தியில் நாறிப் போயிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் தான், திருவனந்தபுரம் எம்.ஜி கல்லூரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. திருவனந்தபுரத்தில் மற்றெல்லா கல்லூரிகளிலும் இந்திய மாணவர் சங்கத்தினரின் வெண்கொடி பறந்து கொண்டிருக்கும் போது எம்.ஜி கல்லூரியில் ஆர் எஸ் எஸின் மாணவர் அமைப்பான எபிவிபியின் காவிக் கொடி பறந்து கொண்டிருந்தது.

ஆனால், எபிவிபியினரில் ஒரு பெரும்பகுதியினர் இந்திய மாணவர் சங்கத்தில் சேரவே, பல ஆண்டுகளுக்கு பின்னர் எம்.ஜி கல்லூரியில் மீண்டும் வெண் கொடி பறக்க துவங்கியது.

தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே கல்லூரியும் கைவிட்டு போன அதிருப்தி உண்மையில் ஆர்.எஸ்.எஸிற்கு உண்டாகி போனது.

இருதரப்புக்குமிடையே கல்லூரிக்கும் உள்ளேயும் வெளியேயும் தொடர் மோதல்கள் உருவாகின. மோதலை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்படுவதும், அமைதி திரும்பவும் துவங்கலாயின.

ஆனால், இரு தினங்களுக்கு முன் மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மார்க்ஸிஸ்ட் உள்ளூர் தலைவர்களின் வீடுகளுக்கு நேரே அதிகாலை 3 மணியளவில் கல்வீச்சு சம்பவங்கள் எதிர்பாராமல் ஆர் எஸ் எஸ்காரர்களால் நடத்தப்பட்டது.

இதன் எதிர்வினையாக, தாக்குதலுக்கு உள்ளான திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலர் பினுவும் மற்றொரு நபருமாக பைக்கில் சென்று பாஜக தலைமையகத்தை கற்கள் வீசி தாக்கினர்.

ஆனால், பாஜகவினர், தாங்கள் மார்க்ஸிஸ்ட் தலைவர்களின் வீடுகளில் தாக்கியதை மறைத்து, அது தொடர்பான குற்றவாளிகளை பாதுகாத்ததுடன், தங்கள் அலுவலகத்தில் எதோ பயங்கரவாத தாக்குதல் நடந்ததைப் போன்று பிரச்சாரத்தைக் கொண்டு சென்றனர்.

மார்க்ஸிஸ்ட் தலைவர்களின் வீடுகளில் தாக்கிய ஆர் எஸ் எஸ்க்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க அவர்கள் தயாராகவே இல்லை. ஆனால், இதற்கு நேர்மாறாக மார்க்ஸிஸ்ட் தரப்பில், கவுன்ஸிலர் பினுவை இடை நீக்கம் செய்து நடவடிக்கையும் எடுத்தனர்.

இத்தகைய பரபரப்புகள் அடங்கும் முன்பே, திருவனந்தபுரம் அருகேயுள்ள ஸ்ரீகாரியத்தில் ராஜேஷ் என்ற ஆர்.எஸ்.எஸ்க்காரர் திடீரென ஒரு கும்பலால் வெட்டப்படுகிறார். அவசரம் அவசரமாக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மரண வாக்குமூலம் அளிக்கிறார்.

அதில் மணிக் குட்டன் என்பவரையும் கூடவே மேலும் 5 பேர் உட்பட மொத்தம் ஆறு பேரது பெயரைக் கூறி விட்டு இறந்து போகிறார்.

போலீஸார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த போது, அவர்கள் அனைவருமே ஆர் எஸ் எஸ் இயக்கத்துடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவர்களாகவும், முக்கிய குற்றவாளி மணிக் குட்டன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்து வந்ததும் தெரிகிறது.

தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவே தாங்கள் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால், இங்கே நாம் கவனிக்க வேண்டியது, கொலையாளிகளின் ஆர் எஸ் எஸ் தொடர்பு தான். ஆர் எஸ் எஸ்க்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பாஜகவினர் கேரளம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு நடத்தி மார்க்ஸிஸ்ட் கட்சியினர் தான் இந்த கொலையை நடத்தியதாக ஒரு பிரச்சாரத்தையும் நடத்திவிட்டார்கள்.

ஏற்கனவே கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்ட நிலையில், அந்த அவப்பெயரை துடைக்க ஆர் எஸ் எஸ் ராஜேஷ் என்ற தங்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினரை இரையாக்கியதோ என்ற கேள்வியே தற்போது அனந்தபுரிவாசிகள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்த திருவனந்தபுரத்தை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். “ ஜனங்களொக்கெ மண்டன்மார் அல்லல்லோ ? “ ( மக்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லையல்லவா ? ) என என்னிடம் திருப்பி சொன்ன அவர், இப்படிப்பட்ட கேவல அரசியல் நடத்தும் பாஜகவின் கேரளாவிற்கு வழிகாட்டுகிறார்களாம். கேரளம் இவர்களது வழியில் சென்றால் நட்டாற்றில் மூழ்கித் தான் போகும் என பதிலளித்தார்.

ஆம்.! தங்களது அவப்பெயரை மறைக்க, தங்களது இயக்க உறுப்பினரின் உயிரையே எடுக்க துணிந்த ஆர் எஸ் எஸின் கோரமுகம் தெரியாமல் கத்திக் கொண்டிருக்கின்றன ஆர் எஸ் எஸ் கசாப்புக் கடையில் பலியாடாகப் போகும் சாதாரண ஆர் எஸ் எஸ் தொண்டன்.