“எடப்பாடி அரசுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?”! ஸ்டாலின் காட்டம்

சென்னை:

“எடப்பாடி அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?”  என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம் என பேசும் , எடப்பாடி,  EWS இடஒதுக்கீடு, OBC-பட்டியல்-பழங்குடி இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் முறைகேடு உள்ளிட்டவை குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி விடுத்துள்ளார்.

சமூகநீதிக்குக் கல்லறை கட்ட நினைப்போருக்கு செங்கல் எடுத்துக் கொடுக்கும் எடப்பாடி, இப்படி பேசலாமா?  என்றும் காட்டமாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து திமுகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் அய்யன் வள்ளுவர் வகுத்த வழியில், சமூகநீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கும் தமிழகத்தில், நூறாண்டுகளுக்கு முன்பே, அந்தக் கொள்கைக்கு விதையிட்டு, நீர்வார்த்து வளர்த்த இயக்கம்தான் திராவிட அரசியல் இயக்கமான நீதிக்கட்சி. அதன் ஆட்சிக்காலத்தில்தான் “கம்யூனல் ஜி.ஓ. “ என்கிற வகுப்புவாரி உரிமை அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்மூலமாக அனைத்துச் சமுதாயத்தினருக்கும் வேலை வாய்ப்பும் கல்வி உரிமையும் கிடைத்தன. இது, பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் நமக்குக் கிடைத்த சிறிய அதிகார வரம்பைக் கொண்டு, தொடக்கத்தில் சமூகநீதி காத்திட நிறைவேற்றப்பட்ட பெரும் செயலாகும்.

“எவரும் எவருக்கும் எஜமானரும் அல்ல, யாரும் யாருக்கும் அடிமையுமல்ல” என்ற சமத்துவத்தின் அடிப்படையில் உருவான இந்த இடஒதுக்கீட்டினைத் தடுக்கும் நோக்கத்தோடு, சுதந்திரம் பெற்று குடியரசான இந்தியாவில், செண்பகம் துரைராஜ் என்பவர் பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றங்கள், இந்த வகுப்புவாரி உரிமையைச் செல்லாது என அறிவித்து உத்தரவிட்ட நிலையில், சமூகநீதியைக் காப்பாற்றும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் எனத் தமிழகமே போர்க்கோலம் பூண்டது. திராவிட இயக்கங்களான தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகமும், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக அறப்போர்க்களத்தில் இறங்கியதால், டெல்லி வரை அதிர்ந்தது.

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றை நன்கறிந்தவரும், சமூக ஒடுக்குமுறைகளை, தான் பிறந்து வளர்ந்த மண்ணில் கண்டவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், அன்றைய பிரதமர் பண்டித நேரு அவர்களிடம், தமிழகத்தின் எழுச்சியை எடுத்துரைத்த பிறகு, 1951ல் இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. அதன்மூலம் இடஒதுக்கீடு நிலைபெற்றது.

தி.மு.கழகம் தொடங்கப்பட்ட இரண்டாவது ஆண்டிலேயே இப்படியொரு வெற்றிகரமான போராட்டம் என்பதுதான், நமது சமூகநீதி வரலாற்றுப் பயணம்.

1967ல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1969ல் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வரான பிறகு, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு சட்டரீதியான வலுச் சேர்க்கவும், நடைமுறையில் கூடுதல் பலனளிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்படுவோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வாய்ப்புகளுக்காக, “சட்டநாதன் கமிஷன்” அமைக்கப்பட்டது. அதன்பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியின் விளைவாகத்தான், அதுவரை 25 சதவிகிதம் என்று இருந்த, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, 31 சதவிகிதம் என உயர்த்தப்பட்டது. 16 சதவிகிதம் என்று இருந்த, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 18 சதவிகிதம் என உயர்த்தப்பட்டது.

சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் படைத்த சாதனை இது.

அதன்பிறகு, எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சி அமைந்தபோது, திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கத்தையே புறக்கணித்திடும் வகையில், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலினைக் கொண்டு வந்தார். “ஆண்டு வருமானம் 9,000 ரூபாய்க்கு மேல் இருப்பவர்களின் குடும்பத்தாருக்கு, இடஒதுக்கீடு கிடையாது” என அறிவித்தார்.

அந்த அறிவிப்பு கண்டுதமிழ்நாடு தகித்தது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், சமூகநீதி சக்திகள் போராட்டங்கள் நடத்தின. அதன் விளைவாக, 1980 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்வி தந்த கசப்பான அனுபவத்தின் காரணமாக, மக்களின் வாக்குகளை மனதில் வைத்து, வருமான வரம்பை நீக்கியதுடன், 31 சதவிகிதமாக இருந்த, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 50 சதவிகிதமாக உயர்த்தினார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.

அதன்பிறகும் அவருடைய ஆட்சிக்காலத்தின் இறுதியில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள் பெருமளவில் நடந்தன. ஆனால் அது குறித்து எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை.

1989ஆம் ஆண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற போதுதான், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 30 சதவிகித இடங்களை அவர்களுக்கு உறுதி செய்து, மீதி 20 சதவிகித இடங்களை தனியாகப் பிரித்து, “மிகப் பிற்படுத்தப்பட்டோர்” என்ற புதிய பிரிவினை உண்டாக்கி, அவர்களுக்கான இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.

பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 18 சதவிகிதம் முழுமையும் பட்டியல் இனத்திற்கும், பழங்குடியினருக்கு தனியாக 1 சதவிகித இடஒதுக்கீடும் வழங்கி ஆணையிட்டு நிறைவேற்றியவர், தலைவர் கலைஞர் அவர்கள். இதுதான் தமிழ்நாட்டில் நிலவும் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் வரலாறு. இந்த 69 சதவிகிதம் என்பதை, எண்ணிக்கை அளவிலும் ஏற்றத்தாழ்வற்ற முறையிலும், அனைத்துச் சமூகத்தினருக்கும் கிடைக்கச் செய்தது, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசு.

அதுமட்டுமன்று! இன்றைய நாளில் (நவம்பர் 27) நினைவு போற்றப்படும், “சமூகநீதிக் காவலர்” வி.பி.சிங் அவர்கள் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, தேசிய முன்னணியில் அங்கம் வகித்த தி.மு.க.வின் பெருமுயற்சியால், மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் 27 சதவிகித இடங்களை, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை என்பது, இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக மாறியது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால், வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது. பதவி துறந்தாலும் கொள்கை மறவாத சமூகநீதிக்காவலருக்கு, சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில், சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

அதன்பின், இந்தியாவில் இடஒதுக்கீடு எந்த வகையிலும் 50 விழுக்காட்டினைத் தாண்டக்கூடாது என, இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் கற்கோட்டையாக உருவாக்கி வைத்திருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அப்போது ஆட்சியில் இருந்தவர், ஜெயலலிதா அம்மையார். அவர் ஆட்சியில் இடஒதுக்கீட்டைக் காப்பதற்கான சட்டப் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ இல்லை.

அதேநேரத்தில், இடஒதுக்கீடு பறிபோவதை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திய ஜெயலலிதா அரசைக் கண்டித்து, சமூகநீதியைக் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அப்போது, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் , தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்த அப்துல் லத்தீப் உள்ளிட்டோர் போராட்டக் களத்திற்கு ஆயத்தமாகி, தலைவரின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தபோது, தலைவர் கலைஞர் அவர்களையும் அவருடன் போராட்டக் களத்திற்குப் புறப்பட்ட தலைவர்களையும், கோபாலபுரத்திலேயே கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றியதுதான் அம்மையார் ஜெயலலிதாவின் அரசு.

தொடர்ச்சியான போராட்டக் குரலும், கண்டன அறிக்கைகளும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் சட்டரீதியாக வழங்கிய கருத்துருவும், அம்மையார் ஜெயலலிதாவின் கண்களை மெல்லத் திறக்கச் செய்தன. அதன்பிறகே, சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்பட்டது. அதன்பிறகும்கூட, உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளால் இன்றளவிலும் 69 சதவிகித இடஒதுக்கீட்டினைப் பாதுகாத்திட தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தவேண்டியுள்ளது.

இத்தகைய போராட்டங்களுக்கு நடுவிலும், 69 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பிற்குள்ளாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிகித ஒதுக்கீட்டில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு 3.5 சதவிகித தனி ஒதுக்கீடும், பட்டியல் இனத்தவருக்கான 18 சதவிகித ஒதுக்கீட்டில் அந்த இனத்தைச் சேர்ந்த அருந்ததிய சமுதாயத்தினருக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடும் வழங்கியவர், தலைவர் கலைஞர் அவர்கள்.

பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவிகித ஒதுக்கீடு ஆகியவற்றையும் இந்த 69 விழுக்காட்டிற்குள் நடைமுறைக்குக் கொண்டு வந்து, முழுமையான சமூகநீதியைத் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு நிறைவேற்றியது.

ஜெயலலிதா ஆட்சியில் இதுபோல எவருக்கேனும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? எத்தனை விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது?

இடஒதுக்கீட்டின் வரலாறு பற்றி அக்கறையில்லாமல், உண்மை விவரங்களை அறியாமல், “சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம்” என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறும் உதட்டளவில் உரக்கப் பேசியிருக்கிறார்.

திரு.ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்தைத் திறந்துவைக்கும் விழாவில்தான் முதலமைச்சர் இப்படிப் பேசியிருக்கிறார்.

எந்த முதலமைச்சர்? மருத்துவக் கல்விக்கான பட்ட மேற்படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பறிபோயிருப்பதையே அறியாத முதலமைச்சர்.

“நீட் “தேர்வு எனும் கொடுவாளால் மருத்துவக் கனவு காணும் கிராமப்புற – ஏழை – ஒடுக்கப்பட்ட மாணவ மணிகளின் எதிர்காலம் வெட்டிச் சாய்க்கப்படுகிறதே, அந்த “நீட்” தேர்வை ரத்து செய்யக்கோரி நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானம், மத்திய அரசின் குப்பைக் கூடைக்குப் போனதைக்கூட அறியாத முதலமைச்சர்.

அரியலூர் மாணவி அனிதா தொடங்கி ஏராளமான மாணவச் செல்வங்களின் உயிரைப் பறித்து, அவர்தம் குடும்பத்தாரைக் கண்ணீருடன் கதற வைக்கும் கொடூரத்தை உணரக் கூட இதயமில்லாத முதலமைச்சர்தான், “சமூகநீதிக்கு ஆபத்து என்றால் அதனைப் பாதுகாப்போம்” என்று பேசியிருக்கிறார்.

இடஒதுக்கீட்டிற்கான அளவுகோல் என்பது; “சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் (Socially and Educationally) பின்தங்கியிருப்பாருக்கான உரிமை!” என்பதேயாகும். இதைத்தான் நமது அரசியல் சட்டமும் நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. இதில் பொருளாதார அளவுகோலுக்கு இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக அவை தெரிவித்தபிறகும், “பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு” என்ற சட்டத்தை மத்திய அரசு அவசர அவசரமாகக் கொண்டு வந்து, அதனை மட்டும் அனைத்து மட்டங்களிலும் நிறைவேற்றி வரும் நிலையில், அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட – வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட – சாதிப் படிநிலையின் அடிப்படையில் ஒடுககப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்பதையாவது தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் உணர்ந்திருக்கிறாரா?

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து தமிழகத்தில் உள்ள கட்சிகளின் கருத்துக்களை அறிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசின் சார்பில் கூட்டினார்களே, அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அக்கறைகூட இல்லாமல் அதனைத் தவிர்த்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கப் பயந்து, மத்திய ஆட்சியாளர்களின் மனம் கோணாத வகையில் மவுனம் சாதிக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சமூகநீதிக்கு ஆபத்து என்றால் குரல் கொடுப்போம் என்பது ; வேடிக்கை மட்டுமல்ல, வேதனை மிகுந்ததுமாகும்.

மத்திய அரசின் ரயில்வே, அஞ்சலகம், வங்கிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீட்டினையும் அந்தந்த மாநிலத்தவருக்கான வேலைவாய்ப்புகளை

யும் தீர்த்துக்கட்டும் நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெறுகின்றன. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீட்டு முறை ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. பட்டியல் இனத்தவர், பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடுகளிலும் பல முறைகேடுகள் நடக்கின்றன.

மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த மருத்துவக் கல்வியையும் பறித்து, அதிலும் இடஒதுக்கீடு இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. இத்தனை ஆபத்துகள் மொத்தமாகச் சூழ்ந்துள்ள நிலையில், நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல, இம்சை அரசன் புறாவை வறுத்துச் சாப்பிட்டதுபோல, ஏதோ ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டு பேசுகிறார், எடப்பாடி பழனிசாமி.

இவரது அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?

சமூகநீதிக்கு பெரும் அபாயம் சூழ்ந்துள்ள இந்த நிலையிலும், அதனைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றச் செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது, தி.மு.கழகம்.

மத்திய அரசுப் பணிகளில் “இதர பிற்படுத்தப்பட்டோர்” உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்குமான இடஒதுக்கீட்டினை வழங்கிட வலியுறுத்தியும், தற்போதைய தேவைக்கேற்ப இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தக் கோரியும் தி.மு.கழக உறுப்பினர்களும் தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, “India For Sale” என்கிற அளவுக்கு மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வரும் நிலையில், தனியார் துறையிலும் இனி சமூகநீதிக் கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதும் தி.மு.கழகம்தான்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து போராடுவதும் தி.மு.கழகக் கூட்டணிதான்.

கருங்கற்களால் ஆன கோட்டை போல, சமூகநீதியைக் கட்டிக் காத்தது தி.மு.கழக அரசு. அந்தக் கோட்டையைத் தகர்த்து, சமூகநீதிக்குக் கல்லறை கட்ட நினைப்போருக்கு செங்கல் எடுத்துக் கொடுக்கிறது அ.தி.மு.க. அரசு.

சமூகநீதிக் கொள்கை வேரூன்றியுள்ள தமிழ்நாட்டு மண்ணில், அதற்கு எதிரான சக்திகளை முறியடித்து, சமூகநீதியைக் காக்கும் அரணாக தி.மு.கழகம் எப்போதும் திகழும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி