சென்னை: ஒரு விடுதியில் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கி இருந்தால் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

கோவையில் உள்ள விடுதி ஒன்றை வருவாய்துறையினரும், போலிசாரும் சீல் வைத்து மூடினர். அந்த விடுதியின் ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கியிருந்தாகவும், அவர்களுக்கு அடுத்த அறையில் மதுபுட்டிகள் இருந்ததாகவும் கூறி இருந்தனர்.

அந்த விடுதி புகழ்பெற்ற விடுதியாகும். வருவாய் மற்றும் போலிசாரின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதியை மூடுவதற்கு உரிய சட்ட வழிகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என்று கூறி, விடுதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு விடுதியில் ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கி இருந்தால் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளது.

நீதிமன்றம் மேலும் கூறியிருப்பதாவது: ஒரு அறையில் மதுபுட்டிகள் இருந்தல் உடனே அங்கு தவறான செயல்கள் நடப்பதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? அதற்கு உங்களிடத்தில் பதில் இல்லை.

ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆண், பெண் தங்கக்கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியிருக்கிறது.