108 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் என்பது வெறும் வதந்தி : வெதர்மேன் கூல் தகவல்

 

Whatsapp alerts of 45-48 C in the Chennai City are rumours : Tamilnadu weatherman

 

சென்னையில் கொடுமையான வெயில் அடிக்கும், வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி சில ஊடகங்களிலும் கூட பரவி வருகிறது. இவை வெறும் வதந்தி என்றும், பொதுமக்கள் இதனைப் பார்த்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், வானிலை மாற்றங்கள் குறித்த முக்கியத் தகவல்களை அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து முகநூலில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
சென்னை நகரைப் பொருத்தவரையில் உள்பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு (ஏப்-18,19) வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். மாநிலத்தின் உள் மாவட்டங்களிலும் வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னையில் கடலில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும் பகுதிகளில் இன்று 40 டிகிரி செல்சியஸுக்கும் சற்று அதிகமாகவே வெயில் இருக்கும். எனவே, வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லவும். தொப்பியை மறக்க வேண்டாம். சூரிய வெப்பம் நேரடியாக தலையில் விழும்படி வெளியே செல்ல வேண்டாம். அப்படிச் சென்றால் நீர்ச்சத்து இழப்பு நிச்சயம் ஏற்படும். ஏசி வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு சிறு குழந்தைகளை அனுப்புவதைத் தவிர்க்கலாம்.

 

இந்த முன்னேற்பாடுகளே போதுமானது. இதற்கு மேலும் பயம் கொள்ள தேவையில்லை. சென்னையில் இதுவரை அதிகபட்சமாக கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி) வெயில் பதிவானது. அதன்பின்னர் அந்த அளவு வெயில் அடிக்கவில்லை.

 

இப்போதைக்கு 113 டிகிரி முதல் 118 டிகிரி வரை (45 டிகிரியில் இருந்து 48 டிகிரி செல்சியஸ் வரை) வெயில் அடிக்கும் என்ற வதந்தியை தயவு செய்து பரப்ப வேண்டாம். அந்த அளவு வெயில் இருக்காது.”

 

வெயில் குறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் தகவல்கள் அதிகமாக பரவிவருவதை அடுத்து சென்னை வெதர்மேன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.