டில்லி:

பணமதிப்பிழப்பு அறிவிக்கு பின்னர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான நடைமுறைகளை தேசிய பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கான கழகம் நிர்வகித்து வருகிறது.

ஏற்கனவே பே டிஎம், பிஹெச்ஐஎம் யுபிஐ போன்ற அமைப்புகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது வாட்ஸ் அப் நிறுவனமும் இந்த பணம் செலுத்தும் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட சோதனை பணிகளை அந்நிறுவனம் கையாண்டு வந்தது. வாட்ஸ் அப் சேவையை இந்தியாவில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியாக உள்ளது.

இதில் 10 லட்சம் பேருக்கு பணம் செலுத்தும் சேவையை அளிக்கவுள்ளது. இதற்கு தேசிய பணம் செலுத்தும் நடைமுறைக்கான கழகம் அனுமதி வழங்கியுள்ளது. வாடிக்கையாளரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் மூலம் இந்த சேவையை வாட்ஸ் அப் அளிக்கவுள்ளது. மிகவும் போட்டி மிகுந்த சந்தைக்குள் வாட்ஸ் அப் நுழைந்துள்ளது. கூகுள் பேமன்டஸ் செயலி, பே டிஎம் போன்ற நிறுவனங்களுடன் வாட்ஸ் அப் போட்டியிடவுள்ளது.

வாட்ஸ் ஆப் சேவைக்கு பேடிஎம் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘‘இதில் லாக் இன், ஆதாரை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைகள் இல்லை’’ என்று பே டிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.

‘‘இதனால் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். இதுகுறித்து தேசிய பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கான கழகத்திடம் முறையிடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.