தமது கருத்துரிமையை வெளிப்படுத்துவதற்காக வெளிநாடு செல்ல முயன்ற சமூக செயல்பாட்டாளர்களை மிகவும் விழிப்புடன் இருந்து தடுத்து நிறுத்தும் காவல்காரரின் (செளகிதார்) மத்திய அரசு, வங்கி மோசடியாளர்களை மட்டும் எப்படி சொல்லிவைத்தாற்போல் கோட்டைவிடுகிறது என்ற கேள்வியைக் கேட்டுள்ளார் சமூக செயல்பாட்டாளர் ரோகித் குமார்.

இவர் கூறியவற்றிலிருந்து சில அம்சங்கள்:

கடந்த 2015ம் ஆண்டு, பிரிட்டிஷ் நாடாளுமன்ற கமிட்டியின் முன்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, லண்டன் செல்லும் விமானத்தில் ஏறிய கிரீன்பீஸ் செயல்பாட்டாளர் பிரியா பிள்ளை, மத்திய அரசால் மிகவும் விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு, விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்.

ஏனெனில், அவர் லண்டன் சென்று, அவரின் நோக்கத்தை நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டால், தேசத்தின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுமாம்.

கடந்த 2016ம் ஆண்டு, இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தெற்காசியாவின் சுற்றுச்சூழலியல் வரலாறு மற்றும் அரசியல் குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக விமானம் ஏறிய பழங்குடியின மக்களுக்கான உரிமைப் போராளி கிளாட்சன் டங்டங், மத்திய அரசால் மிகவும் விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு, விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். அவரின் செயல்பாடும் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துமாம்.

ஆனால், இப்படி மக்களுக்கான போராளிகளை மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்து கண்காணித்து, குறைந்தபட்சம் அவர்களின் கருத்து சுதந்திரத்தைக்கூட வெளிப்படுத்த முடியாமல் செய்யும் இந்த செளகிதார் அரசுதான், வரிசெலுத்துவோர் மற்றும் முதலீட்டாளர்களின் பணத்தை, வகைதொகையின்றி கொள்ளையடித்து, நாட்டைவிட்டு தப்பியோடும் திருடர்களை பிரமாதமாக கோட்டைவிடுகிறது.

நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி, நிதின் சான்டெசரா உள்ளிட்ட பல குற்றவாளிகளின் பட்டியல் நீள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், இப்படியான 27 குற்றவாளிகள் நாட்டைவிட்டு மிகவும் லாவகமாக, காவல்காரரின்(பிரதமர்) கண்களை ஏமாற்றிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

எனவே, நம்மை காவல் காக்கும் செளகிதார் (பிரதமர்) எப்போதெல்லாம் விழித்திருந்தார்? மற்றும் எப்போது உறங்கினார்? என்ற கேள்வியைக் கேட்டுள்ளார் அந்த சமூக செயல்பாட்டாளர்.

– மதுரை மாயாண்டி