டில்லி நகர் பற்றி எரியும் போது விருந்து சாப்பிட்ட நீரோ மன்னர்கள்

டில்லி

டில்லி நகரம் கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அமெரிக்க அதிபர் குடும்பத்துடன் விருந்து சாப்பிட்டுள்ளனர்.

டில்லியின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகக் குடியுரிமை சட்டப் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்துள்ளது.  குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வன்முறையில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர்.  நூற்றுக் கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நாடெங்கும் இதனால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த மற்றும் பிரதமர் மோடி வாய்கூட திறக்கவில்லை.   கிட்டத்தட்ட டில்லி நகர் கடும் வன்முறையில் தவித்து வந்த போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவர் குடும்பத்தினருடன் இருவரும் விருந்தில் கலந்துக் கொண்டு இருந்துள்ளனர்.   டில்லியில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆளுநர், மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு சந்திப்பை நிகழ்த்தினார்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து தற்போதைய நிலை குறித்து தகவல் அளித்து தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தவிர்ப்பார் எனக் கூறப்பட்டது    ஆனால் அவரும்  இது குறித்து எவ்வித தகவலும் அளிக்கவில்லை.  அத்துடன் அரசின் ஒவ்வொரு சாதனைகள் குறித்தும் செய்தியாளர்களிடம் விவரம் அளிக்கும் உயர்மட்ட அதிகாரிகளும் இது குறித்து ஏதும் கூறவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலரான மைக்கேல் குகெல்மன் தனது டிவிட்டரில், “டில்லி நகரமே கடும் வன்முறையால் பாதிப்பு அடைந்துள்ள நேரத்தில் இந்திய அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் அமைதியாக உள்ளது மிகவும் மோசமானதாகும்.  இந்த நேரத்தில் அமைதி மற்றும் ஒற்றுமைக்குக் குரல் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.  ஆனால் இதுவரை அது குறித்து யாரும் பேசவும் இல்லை” எனப் பதிந்துள்ளார்.

மற்றொரு ஆர்வலர், “ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாகச் சொல்வார்கள்.   தற்போது டில்லி நகர் தீப்பற்றி எரியும் போது அங்குள்ள நீரோ மன்னர்கள் அமெரிக்க அதிபர் குடும்பத்துடன் விருந்து சாப்பிட்டுள்ளனர்.   ஏற்கனவே குஜராத் கலவரத்தின் போது மோடி அமைதி காத்ததை இது நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி : தி டெலிகிராஃப்

கார்ட்டூன் கேலரி