சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கல் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் டிசம்பர் 31ந்தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று நம்புவதாக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்,  சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஜீலை 3ம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக ஜூன் மாத அறிவிப்புக்கு பின் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும்,  வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்து உள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் உயிரிழந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் பணப்பட்டுவாடா புகாரில் சிக்கி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள ஆர்.கே நகருக்கு அந்த விதி பொருந்தாது என்று கூறப்படுகிறது.