சென்னை:

மிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து, முன்னதாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தமிழக பாஜக கட்சி தலைமை இல்லாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில்,  வரும் நவம்பர் மாதம் தமிழக பாஜக தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பாஜக தலைமை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  கோவையில்  செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது,

“கட்சியின் அமைப்புத் தேர்தல் நடைபெறத் துவங்கியிருக்கிறது. இம்மாத இறுதிவரை பாஜகவின் கிளைகளுக்கு தேர்தல் நடைபெறும். 25 உறுப்பினர்கள் இருக்கும் கிளைகளுக்குத்தான் தேர்தல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து ஒன்றியம், நகரப் பகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும். பின்னர் மாவட்டத் தலைவர்கள் தேர்தல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

மாநிலத் தலைவர் இல்லையென்றாலும் கூட கட்சிப் பணிகள் எவ்வித சுணக்கமும் இன்றி நடைபெற்று வருவதாகத் தெரிவித்த வானதி சீனிவாசன், “நவம்பர் மாதம்தான் மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என கட்சி அறிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களுக்கெல்லாம் இடையிலேயே தலைவர்களை அறிவித்துள்ளனர். அது போல தமிழகத்துக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தலைவர் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு” என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 45 லட்சமாக இருப்பதாகவும் வானதி சீனிவாசன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.