சென்னை

ரடங்கால் திருமணம் நடைபெறாத போது வடபழனி கோவில் நிர்வாகம் மண்டப வாடகைக்கான ஜிஎஸ்டி வசூலிக்க உள்ளது.

சென்னையில் மிகவும் புகழ் பெற்ற வடபழனி முருகன் கோவிலிலும் மற்றும் கோவிலுக்குச் சொந்தமான வள்ளி திருமண மண்டபத்திலும் ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்றன.  குறிப்பாக வள்ளி திருமண மண்டபத்துக்கு அதிக கிராக்கி உள்ளதால் சுமார் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே மண்டபம் பதிவு செய்வது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் வசிக்கும் கணேஷ் என்பவர் தன் மகனின் திருமணத்தைக் கடந்த மே மாதம் நடத்த  உத்தேசித்திருந்தார்.  இதையொட்டி சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வள்ளி திருமண மண்டபத்தை ரூ.1,40,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்தார்.  மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி அனைத்து திருமண மண்டபங்களும் மூடப்பட்டன.  கணேஷ் தனது மகனின் திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசு ஏற்கனவே முன் பணமாகச் செலுத்திய பணத்தை மண்டபங்கள் திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தும் இதுவரை கோவில் நிர்வாகம் ஒரு ரூபாய் கூட தராமல் உள்ளது.

இது குறித்து விளக்கம் கேட்டபோது ஊரடங்கால் கோவில் மூட்டப்பட்டிருந்ததால் வருமானம் இல்லை எனவும் அதனால் உடனடியாக தொகையைத் திருப்பி அளிக்க முடியாது எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும் இந்த முன்பணத்தைத் திரும்ப அளிக்கும் போது ஜிஎஸ்டி தொகையான ரூ.22000 போக மீதித் தொகையை மட்டுமே கொடுக்கப்படும் என நிர்வாகம் கூறி உள்ளது.

திருமணம் நடைபெறாத நிலையில் வடபழனி கோவில் நிர்வாகம் ஜி எஸ் டி வசூலிப்பது மிகவும் தவறான செயல்  என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.