பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கூடாதா? மு.க.ஸ்டாலின்

சென்னை:

ச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்திருக்கும்போது,  பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை அரசு குறைக்க கூடாதா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும், உலகளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்தாலும், கச்சா எண்ணெய் விலை சில நாட்களாக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. சுமார் 33 சதவீதம் வீழ்ச்சியடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும்,  தங்களது உற்பத்தியை குறைக்கப்போவதில்லை என்று சவூதி அரேபியாவும், ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.

எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக் ) கடந்த வாரம், கச்சா எண்ணெய் விநியோகத்தைக் குறைப்பது தொடர்பான ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதன் விளைவாக, சவூதி அரேபியா தனது ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ விற்பனை விலையை ஒரு பீப்பாய்க்கு 6 முதல் 8 டாலர் வரை குறைத்து நிர்ணயித்தது. இந்த  காரணத்தால் உலகவில் தற்போது கச்சா எண்ணெய் விலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில், அதன் பயனை இந்திய மக்கள் அனுபவிக்க மத்திய – மாநில அரசுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டரின் விலைவாசி குறைவது என்பது பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டு கோலாக அமையும்.

சர்வதேச அளவில் விலை உயரும்போது பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும் அரசு, தற்போது குறைக்க கூடாதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.