கொரோனா பரவலின் வேகம் எப்போது மட்டுப்படும்? – எய்ம்ஸ் இயக்குநர் சொல்வது என்ன?

புதுடெல்லி: ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில், இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மட்டுப்படும் என்று தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குளேரியா.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலைக்கான வாய்ப்பு மிக அதிகம். எனவே, பரவலின் எண்ணிக்கை குறைந்தாலும்கூட, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்போதும் மேற்கொள்வது அவசியம்.

ஏனெனில், கடந்த 1918ம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய வைரஸ் தொற்றின்போது, பரவலின் வேகம் சற்று தணிந்தவுடன், மக்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டியதால், அந்த தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டது.

எனவே, கொரோனா பரவலின் தீவிரம் அடுத்த சில மாதங்களில் குறைந்தாலும்கூட, குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

தற்போது, தொற்று அதிகமிருக்கும் பகுதிகளில் வரம்பிடப்பட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளிலிருந்து இதர பகுதிகளுக்கு தொற்று பரவாமல் இருக்க, மேலும் தெளிவான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதியிலிருந்து, மக்கள் பாதிப்பு குறைந்த பகுதிகளுக்கு செல்வதை நாம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தங்களில் அறிகுறிகளை உணரும் பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

வைரஸ் தொற்று எப்போது எப்படி மாறும் என்பதை சரியாக அறுதியிடுவது கடினம். ஆனாலும், வரும் ஜூலை மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மட்டுப்படும்

இந்தியாவில் அதிகளவு தொற்று 10 பெருநகரங்களில்தான் உள்ளது. இவைகளின் பாதிப்பு, மொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட 70%. இந்தியாவின் நிலையை, பிற நாடுகளோடு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுதல் கூடாது. நாம் அதிக தொற்றுள்ள பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த வ‍ேண்டும்” என்றுள்ளார்.

இந்தியாவில், இதுவரை மொத்தம் 4.5 லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதோடு, அவர்களில் 14,476 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.