இலங்கைத் தமிழர் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்!: ரஜினிகாந்த்

ரிய நேரம் வரும்போது சந்திப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தில் அறக்கட்டளை, ஈழப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு,  150 வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளது. இதை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இலங்கை யாழ்ப்பாணத்தில் நடக்க இருந்தது. அந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்தகொள்வதாக இருந்தார்.

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர், ரஜினி தனது இலங்கை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கடித அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “  நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.  நேரம் கூடி வரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்’’ என, தெரிவித்துள்ளார்.