எட்டு வழிச்சாலைக்கு நிதி இருக்கிறது; எஸ்சி,எஸ்டி மாணவர் கல்விக்கு நிதி இல்லையா?:   விஜயகாந்த் கேள்வி

எட்டு வழிச்சாலைக்கு நிதி இருக்கிறது; எஸ்சி,எஸ்டி மாணவர் கல்விக்கு நிதி இல்லையா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நிதியை கல்லூரிகளுக்கு வழங்காமல் இருப்பதன் மூலம் மாணவர்களும், கல்லூரி நிறுவனங்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஜாக்டோ ஜியோ அமைப்பு சம்பள உயர்வுக்காக உண்ணாவிரதம், போராட்டம் நடத்தியும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.

 

அரசிடம் மனம் இருக்கிறது, பணம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். ஆனால் சேலத்தில் இருந்து எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு மட்டும் மத்திய அரசிடம் இருந்து பத்தாயிரம் கோடி நிதியை பெற்று தமிழக அரசு பொதுமக்கள், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கு மட்டும் பணம் இருக்கிறதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுபோல் யோகா மற்றும் ஆயுர்வேதா மருத்துவமனை அமைப்பதற்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்குவதை பார்க்கும் பொழுது, எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி நிதியினை ஒதுக்குவதற்கு முதல்வர் எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏன் அக்கறை செலுத்தவில்லை என மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் அரசாங்க ஒப்பந்த வேலைகள் எடுத்து பணிகள் முடித்த பிறகும் தமிழக அரசு அதற்கான நிதியியை ஒத்துக்காமல் காலம் தாழ்த்துவதால் பல திட்டங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கியுள்ளது. எனவே தமிழக அரசு நடப்பாண்டிற்கான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்து, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும்” என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.