சென்னை:

ஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந்தேதி தனது புதிய கட்சி தொடங்குவது குறித்து நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி, அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று தெரிவித்தார்.   இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்… அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்… இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா, வர மாட்டாரா என்று அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களிடை யேயும் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில்தான் கடந்த 5ந்தேதி தனது மக்கள் மன்றத்தைச்சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் பெயர், கொடி போன்ற அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசும்போது,  கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது, நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு நிறைய திருப்தி. ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் அவ்வளவு திருப்தி இல்லை. ஏமாற்றம்தான். அது என்னவென்று நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. பிறகு சொல்கிறேன் கூறி.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் கட்சி நிர்வாகிகளிடம் ‘’நான் கட்சி ஆரம்பித்த பிறகு, ‘’நான் முதல்-அமைச்சர் ஆக மாட்டேன். கட்சி மட்டுமே என கட்டுப்பாட்டில் இருக்கும். நமது ரஜினி மக்கள் மன்றத்தில் பெரிய மாற்றம் இருக்கும்’’  என்று கூறியதோடு’’ இங்குப் பேசப்பட்ட விஷயங்கள் நம்மோடு இருக்கட்டும். உங்கள் மனைவியிடம் கூட இங்கு நடந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து ரஜினியை திருநாவுக்கரசர் உள்பட அரசியல் பிரபலங்கள் சிலர் சந்தித்து அவருடன் பேசிவிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், நாளை மீண்டும் மாவட்டச் செயலாளர்களை சந்திக்கிறார். ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களை கூட்டி 6 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் மீண்டும் சந்திப்பபுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இது தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளைய கூட்டத்தைதொடர்ந்து நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது,  கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது… ரஜினியின் நாளைய அறிவிப்பு தமிழக அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.