செட்டில்மெண்ட் எப்போது?: முதல்வரை மிரட்டும் எம்.எல்.ஏக்கள்!

“கோட்டை வட்டாரத்தில் பேசப்படும் தகவல்” என்ற முன்னுரையோடு வாட்ஸ் அப்பில் நியூஸ்பாண்ட் அனுப்பியது:

“நாளுக்கு நாள் முதல்வருக்கு  டென்ஷன் எகிறி வருகிறது. கடந்தவராம் தன் நெருங்கிய உறவுகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்கிற அளவுக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள் என்று புலம்பினாராம்.

“அய்யய்யோ… அப்படி ஏதும் முடிவெடுத்துவிடாதீர்கள்” என்று பதறியதாம் அவரது உறவுகள்.

டில்லியிலிருந்து அவ்வப்போது வரும் அதிரடி உத்தரவுகள் கூட முதல்வரை அத்தனை டார்ச்சர் செய்வதில்லையாம். ஆனால், ரொம்பவே கிடுக்கிப்பிடி போடுபவர்கள் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்தானாம்.

இந்நிலையில் தற்போது முன்னாள் முதல்வருடனான அணியுடன் இணைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக கட்சியின் துணைப்பொதுச்செய லாளராக இருப்பவர்  தனி லாபி நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக ஒருசில எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் மூலம் ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து, அரசை முடக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை தலைமை செயலகம் வர வேண்டும் என்று முதல்வர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே சொகுசு பங்களாவில்  தங்க வைக்கப்பட்டபோது, கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் தரப்படும் என்றும், அவர்களது தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளில் கமிஷன் தரப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் எம்எல்ஏக்களுக்கு  வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது முதல்வருக்கு ஆதரவாக வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு 2சி, 3சி,  50×10எல் என கூறப்பட்ட கோடு வேர்டுகள் வெளியாயின.

ஆனால், 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில், சொன்னது போல பத்து சி யும் வரவில்லை, மாதம் 10எல்லும் வரவில்லை என்று எம்எல்ஏக்கள் வட்டாரத்தில் முதல்வர்மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வரை அவ்வப்போது சந்தித்து டார்ச்சர் செய்து வருவதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களிடம், முன்பு  போல தற்போது சூழ்நிலை இல்லை, நீங்கள் தற்போது நன்றாகத்தானே சம்பாதிக்கிறீர்கள்… பிறகு என்ன பிரச்சினை என்று முதல்வர் கடிந்ததாகவும், அதன் காரணமாக எம்எல்ஏக்கள் முதல்வர்மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இக்கட்டன சூழ்நிலையையையே, தற்போதைய எதிர்ப்பு அணி  குடும்பத்தினர் பயன்படுத்தி வருவதாகவும், ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாகவும், அவர்களின் பசியை உடனே போக்கி வைக்க தயாராக இருப்பதாகவும்  உறுதி மொழி கொடுத்து வருவதாகவும் தொகுதிகளில் இருந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்நிலையில் முதல்வர் அழைப்பு விடுத்திருப்பது எம்எல்ஏக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை முதல்வரை சந்திக்க வேண்டுமென்றால், ஏற்கனவே கொடுத்த உறுதிமொழியை உடனே நிறைவேற்றினால் மட்டுமே ஆதரவு தருவதாகவும், இல்லையேல், தங்களது ஆதரவு எதிர்ப்பு அணிக்கே என்று கூறி, கோட்டைக்கு வர  மறுப்பு தெரிவிப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.