சென்னை:

திருமழிசை மார்க்கெட் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது குறித்து,  அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா ஹாட்ஸ்டாட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்ததால், கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்டது. அதற்கு பதிலாக திருமழிசை பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் சென்னையில் கடந்த 2 நாட்களாக காய்கறிகள் வரத்து குறைந்ததால், காய்கறி விலை  கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
இதற்கிடையில்  பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையில்  சந்தை அமைக்கப்பட்டு வரும் பணியை அமைச்சர்கள் பா.பென்ஜமின், பாண்டியராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டார்கள்.
இதையடுத்து, இன்று தலைமைச்செயலகத்தில் சிஎம்டிஏ அதிகாரிகளுடன்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.  இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே.திரிபாதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் டி.கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில்  திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் சந்தைக்கான வரைபடத்தை முதலமைச்சரிடம் கார்த்திகேயன் காட்டி விளக்கினார். அனைத்து விவரங்களையும் முதலமைச்சர் கேட்டு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சந்தையில் வரும் ஞாயிற்றுக் கிழமை 10–ந்தேதி முதல் காய்கறி விற்பனை தொடங்கும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருமழிசையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் 15 பொக்லைன் யந்திரங்கள், 4 டிராக்டர்கள் கொண்டு சீரமைப்பு பணி நடந்தது. 10 அடி இடைவெளியில் 194 காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது ஒரு கடைக்கு 200 சதுர அடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் காவல்துறை சார்பில் 9 கண்காணிப்பு கோபுரங்களும், 3 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது.