டில்லி:

இந்தியா-மியான்மர் எல்லையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் என்எஸ்சிஎல்(கே) என்ற நாகலாந்து தீவிரவாத அமைப்பை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் மோசமான நாளாக அமைகிறதோ, அப்போதெல்லாம் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

எல்லைப் பகுதியில் துணை ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே எப்போதும் மோதல் போக்கு தான் இருந்து வருகிறது. இது ஒவ்வொரு விநாடியும் நடக்க கூடிய விஷயம். இது போல் ஏற்கனவே பல முறை நடந்துள்ளது.’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ நான் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோதும் நடந்துள்ளது. சுசில் குமார் ஷிண்டேவிடமும் இது குறித்து கேட்டால் அவரும் ஒப்புக் கொள்வார். ஆனால், தற்போதைய அரசு, தங்களுக்கு மோசமான நாளாக அமையும் போதெல்லாம் எங்கோ ஒரு இடத்தில் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துகின்றனர்.

இந்த அரசில் அனைத்துமே சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக தான் உள்ளது. இந்தியா-மியான்மர் எல்லை அடர்த்தியான வனப்பகுதியாகும். அந்த பகுதி கிளர்ச்சியாளர்களின் சரணாலயமாக தான் உள்ளது. இதை மீடியாக்கள் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று கூறுகின்றன. ஆனால், பதிலடி தாக்குதலில் தான் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணும் தெரிவித்துள்ளது’’ என்றார்.