நான் எப்போது தமிழகம் வந்தாலும் எதிர்ப்பதா?…அமித்ஷா ஆவேசம்

சென்னை:

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடந்த பா.ஜ.க வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‘‘ தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்க தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்தில் பா.ஜ.க எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்ப்பீர்கள்.

விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற வள்ளுவரின் வாக்கை எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு நன்றி’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. மோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ.க மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செய்துள்ளது’’ என்றார்.