வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கே பழுது நீக்கப்படுகிறது?….தேர்தல் ஆணையத்திடம் எதிர்கட்சிகள் கேள்வி

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்று தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

தேர்தலில் அதிக அளவு பெண்களை பங்கு பெற வைப்பது, கட்சிகள்- வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்வது, இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்வது உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று டில்லியில் நடத்தியது.

இதில், அங்கிகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வரும் வாக்குப்பதிவு எந்திர முறைகேடு விவகாரம் எழுப்பப்பட்டது. வாக்குப்பதிவு எந்திர முறைகேடு கண்டுபிடிக்கும் போது அனைத்து வாக்குகளும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே பதிவாவது எப்படி? என்று கேள்வி எழுப்பினர்.

மின்னணு எந்திரங்கள் பழுது நீக்கும் நிறுவனத்தின் முகவரி, பெயரை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் கூறுகையில்,‘‘வாக்குப்பதிவு எந்திரம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதில்லை. முறைகேடு கண்டுபிடிக்கப்படும் எந்திரங்களில் அனைத்து வாக்குகளும் ஒரே கட்சிக்கு தான் பதிவாகி வருகிறது. இந்த எந்திரங்களை யார்? பழுது நீக்குகிறார்கள் என்பது தெரியவேண்டும். எத்தனை பழைய எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்ற விபரத்தையும் வெளியிட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்களித்தற்காக அத்தாட்சி வழங்கும் எந்திரங்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்றார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில,‘‘எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, அதனால் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும்’’ என்றார்.