சேலம்:
கொரோனா ஊரடங்குக்கு இடையே தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில், தற்போது பல இடங்களில் கடைகள் ஈயாடி வருகின்றன. சேலம் பகுதியில் பெரும்பாலான டாஸ்மாக் மதுபானக் கடைகளில் குடி மகன்கள் வரத்து இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது.

முதல்கட்டமாக மதுபானக் கடைகள்  காலை 10 மணி முதல் 5 மணி வரை, 50 டோக்கன்  என பல கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. தற்போது   750 டோக்கனுடன் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டு வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல் இரண்டு நாட்களில் திரண்ட கூட்டம், தற்போது காணப்படவில்லை.
நாள் ஒன்றுக்கு ரூ.170 கோடி வரை விற்ற மது விற்பனை நேற்று (19/05/2020)  வெறும்  91 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அதிகபட்சமாக  திருச்சி மண்டலத்தில் 23 கோடியே 2 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடை பெற்றது. மதுரை மண்டலத்தில் 22 கோடியே ஒரு லட்சத்துக்கும், சேலம் மண்டலத்தில் 20  கோடியே 6 லட்சத்துக்கும் விற்பனை ஆனது. கோவை மண்டலத்தில் 19 கோடியே 4  லட்சத்துக்கும், சென்னை மண்டலத்தில் 6 கோடியே 2 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.  இது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றுமுன்தினம், நேற்று (திங்கள், செவ்வாய்) சேலம் நகரத்தில் பல டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சிலர் மட்டுமே வந்து ஒருசில மதுபாட்டில்ளை மட்டுமே வாங்கிச்சென்றனர். பெரும்பாலான கடைகள் வாடிக்கையாளர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பாதுகாப்பு வழங்க வந்த காவல்துறையினரும், கடை  வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்டு எஸ்கேப்பாகினர். டோக்கன் விநியோகமும் கேள்விக்குறியாகின.
சேலம் நகரில் 58 மதுபானக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும் சராசரியாக நாள் ஒன்றுக்கு  ரூ .2 லட்சம் முதல் 4 லட்சம் வரை விற்பனை நடைபெறும் என்றும், ஆனால், தற்போது பல கடைகளில் ஒரு 1 லட்சத்துக்குக் கூட மது விற்பனை இல்லை, சில கடைகள் ஈயாடுகின்றன என்று டாஸ்மாக் விற்பனை மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர், உச்சநீதி மன்ற தீர்ப்பை அடுத்து கடைகள் திறக்கப்பட்டதும், மீண்டும் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுமோ என்ற பயத்தில் ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிக் குவிந்தனர். ஒருவரே 10க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் வாங்கிச் சென்றனர். இதனால் வியாபாரமும் செழிப்பாக நடைபெற்றது.
ஆனால், தற்போது கடைகள் தொடர்ந்து விற்பனை நடைபெறுவதால், சரக்கு வாங்க ஆட்கள் வருவதில்லை… மேலும் கடும் வெயிலில்  நீண்ட வரிசையில் இருந்து மது வாங்கவும் விரும்பவில்லை, அதனால் சிலர் மாலைவேளைகளிலேயே கடைக்கு வருகின்றனர் என்று கூறினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஹஸ்தம்பட்டியைச் சேர்ந்த குடி மகன் ஒருவர், தான் முதல்நாளிலேயே  180 மில்லி ஓட்காவில் ஒரு பெட்டி (48 பாட்டில்கள்) வாங்கினேன். இது எனக்கு ஒரு மாதத்திற்கு போதுமானது,  மீண்டும் அடுத்த மாதம்தான்  டாஸ்மாக் கடைக்கு செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
குடிமகன்கள் திருந்திவிட்டார்கள் என்று பார்த்தால், பெரும்பாலோர் ஒரு மாதத்திற்கு தேவையான சரக்குகளை வாங்கி கையிருப்பில் வைத்திருப்பர்கள் போலும்…