அடையாறு கால்வாயை தூர் வார ஒதுக்கப்பட்ட 19 கோடி எங்கே? ஸ்டாலின்

சென்னை,

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அப்போது, காஞ்சிபுரம்  ஆதனூர் – அடையாறு கால்வாய் தூர் வாரும் பணிக்கா ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவாரூர், கன்னியாகுமரி போன்ற ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழப்பட்டு, பொதுமக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் வெள்ள நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள  அடையாறு கால்வாயை பார்வையிட்டார்.

முன்னதாக  பழைய பெருங்களத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் நிவாரண உதவி வழங்கினார். அரசு பள்ளியில் தங்கியுள்ளவர்களுக்கு பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

காஞ்சிபுரம் பகுதியில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது,

முடிச்சூர், வரதராஜபுரம், கூடுவாஞ்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆதனூர் – அடையாறு கால்வாயை தூர் வார வேண்டும்; கால்வாயை ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்காக  தற்போதைய அரசு ரூ 19 கோடி  செய்து, கடந்த மார்ச். 23ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், எந்தவித பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. ஆனால்,  45 சதவீத பணிகள் முடிவடைந்து இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தூர் வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாய் எங்கே போனது என தெரியவில்லை. தற்போதைய குதிரை பேர அரசு, வெறும் அறிவிப்புகளை மட்டும்தான் வெளியிட்டு வருகிறது.  மக்கள் கவலைகளை கவனத்தில் கொள்ளவில்லை. வரும் கால கட்டத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.