சேலம்:

அதிமுக – பாமக கூட்டணி அறிவிப்பு தங்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக, சேலம் எட்டு வழிச்சாலை திட்டப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பிபிசி தமிழ் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையின் தொகுப்பின் விவரம் வருமாறு:

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த தமிழக முதல்வர் விவசாய நிலங்களை அழிக்க முயற்சிக்கிறார்.

நீரையும் மண்ணையும், விவசாய நிலங்களை பாதுகாப்போம் என உறுதி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.

அப்போதிலிருந்து  தாங்கள் சொல்ல இயலாத வேதனையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

சேலம் – சென்னை விரைவுச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் கடந்த 9  மாதங்களாக  தொடர்ந்து  போராடி வருகின்றனர்.

விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததோடு மட்டுமல்லாது, இது தொடர்பான புதிய திட்ட அறிக்கையையும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய சாலை திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.

எனினும், இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட பின்னரும் மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட திட்டப்பணிகள் அங்கு மேற்கொள்ளப்படுவதாக அவ்வப்போது விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விரைவுச் சாலை திட்டம் உடனடியாக செயல்படுத்த அரசு தரப்பில் முயன்றதாகவும், தங்களின் அனுமதி இன்றியும், முறையான அரசு அறிவிப்பு இன்றியும் தங்கள் விளைநிலங்களில் சர்வே கற்கள் அத்துமீறி அரசு நட முயன்றது.

பொதுமக்களுக்கு பயன்படாத இச்சாலை திட்டத்தை எதிர்த்தும் போராடிய விவசாய பெருமக்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமுக ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார் விவசாயி மோகன்.

இந்த விரைவுச்சாலை திட்டத்தினை எதிர்த்தும், இயற்கையை பாதுகாக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தீர்ப்பை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்வதற்காக போரட்டம் நடத்த விவசாயிகள் முனைகிறபோது அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது அரசு கட்சிகளின் நிலைமையை பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது என்கிறார் மோகன்.

இந்த பிரச்னை தொடர்பாக தங்களை வழிநடத்துவதாக கூறிய சில கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்று. சாலை அமைத்தே தீருவோம் என அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்ட  ஆளுங்கட்சியான அதிமுகவுடன், பாமக கைகோர்த்து வெளியிட்ட கூட்டணி அறிவிப்பு  ” யாரையும் ” நம்ப இயலாத நிலைக்கு தள்ளிவிட்டதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.