வைகுண்டராஜன் எங்கே? சட்டவிரோத காவலில் அடைப்பா?

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதி மன்றத்தில் மூறையீடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களில் நேற்று காலையில் இருந்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். “ தாது மணல் எடுக்க தமிழக அரசு தடைவிதித்த பிறகும் மணலை எடுத்து வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும், வருமானவரி முறையாக செலுத்துவதில்லை என்பதும் தெரியவந்ததால் சோதனை நடக்கிறது” என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேற்றிலிருந்து வைகுண்டராஜனை காணவில்லை என்றும் அவர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் வழக்கறிஞர்  ரமேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடுத்தார். மனுவை ஆராய்ந்த நீதிபதி  சி.பி.செல்வம்,  இதை ஆட்கொணர்வு மனுவாக அளித்தால் அவசர வழக்காக மதியம் விசாரிக்கலாம் என்று தெரிவித்தார்.

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ளது. நேற்று வைகுண்டராஜன் அங்குதான் இருந்தார். அதன் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியாததால்  அவர் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் மீது பெரும் புகார்கள் வந்திருப்பதால், அது குறித்து விசாரிக்க தலைமை அலுவலகத்திலேயே அவரை இருக்கும்படி வருமானவரித்துறை அதிகாரிகள் பணித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.