எந்த சேனல், எந்த காரணத்திற்காக, எப்போது இருட்டடிப்பு செய்யப்பட்டது?

நெட்டிசன்

முரளிதரன் காசி விசுவநாதன் அவர்களது முகநூல் பதிவு:
————————————————–

தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள் அரசு கேபிள் மூலம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், இந்தப் பிரச்சனை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் இந்து குழுமத்தின் பதிப்பாளரான என். ராம். Ram Narasimhan

அரசு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும்போது ஊடகங்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என்று குறிப்பிட்ட என். ராம், தமிழ்நாட்டில் சமீப காலங்களில் எப்போதெல்லாம் அரசுக் கேபிள் மூலம் சேனல்கள் இருட்டிப்புக்கு உள்ளாக்கப்பட்டன என்ற பட்டியலைச் சொன்னார்.

அந்தப் பட்டியல்…

1. ஜனவரி 23, 2017 – ஜல்லிக்கட்டு கலவரத்தில் காவல்துறை நடவடிக்கையை ஒளிபரப்பு செய்ததற்காக நியூஸ் 7, சன் நியூஸ் ஆகியவை சிறிது காலத்திற்கு அரசு கேபிளில் தெரியாமல் செய்யப்பட்டது.

2. ஜூன் 12, 2017 – டைம்ஸ் நவ் MLA’s for Sale என்ற செய்தியை ஒளிபரப்புச் செய்ததற்காக சிறிது காலத்திற்கு அரசு கேபிளில் தெரியாமல் செய்யப்பட்டது.

3. செப்டம்பர் 2017 – ஜெயா நெட்வொர்க் அரசுக்கு எதிரான சில போராட்டங்களை செய்தியாக வெளியிட்டதால் இருட்டடிப்புக்குள்ளானது.

4. டிசம்பர் 8, 2016- சேகர் ரெட்டி டைரி குறித்த செய்தி வெளியிட்டதற்காக Times Now தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது.

 

 

5. டிசம்பர் 2017 – காவேரி நியூஸ் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தருணத்தில் டி.டி.வி. தினகரன் வெற்றிபெறுவார் என ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதற்காக நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால், டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இப்போது இந்தத் தொலைக்காட்சி நீதிமன்றம் சென்றிருக்கிறது.

6. மார்ச் 2, 2018 – ஊழல் குறித்த செய்திகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்பதற்காக தந்தி டிவி 48 மணி நேரத்திற்கு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டது. இப்போது அந்த நிர்வாகம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் ட்ராய்க்கும் புகார் செய்திருப்பதாகத் தெரிகிறது.

7. மார்ச் 2018 – ஜெயா பிளஸ் அரசு கேபிளில் தமிழகம் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து டிடிவி தினகரனின் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிறகு, மிக மோசமான தரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

8 மே 22, 2018 – தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக நியூஸ் 18 தமிழ்நாடு, அரசு கேபிளில் இருந்து தூக்கப்பட்டது. 12 மணி நேரம் சேனல் ஒளிபரப்பாகவில்லை.

9, ஜூன் 2018 – புதிய தலைமுறை 124வது இடத்திலிருந்து 499வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோயம்புத்தூரில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

10. ம.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான மதிமுகம் டிவி அரசுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பியதற்காக 450வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

11. அரசை தொடர்ந்து விமர்சித்துவருவதால் சத்தியம் டிவி சேனல் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

12. டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களை ஒளிபரப்பியதற்காக சன் டிவி முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது.