சென்னை: தென்காசி, கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை(மே 3) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடலூரில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் 29 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், மருந்து கடைகள், பால் கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் இருந்து திரும்பிய 20 பேருக்கு கொரோனா உறுதியானதால், அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இங்கும் மருந்துக் கடைகள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மருந்துக் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே செயல்படும். மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் நாளை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.