முதல் 2 நாட்கள் பந்துவீச்சிற்கு சுத்தமாக ஒத்துழைக்காத ஒரு பிட்ச்! டாஸில் வென்று முதலில் இங்கிலாந்து பேட்டிங் இறங்கினாலும், விக்கெட்டுகள் கஷ்டப்பட்டு வீழ்த்தப்பட்டன. அத்தகைய பிட்சில், வீரத்தைக் காட்டி இங்கிலாந்து 578 ரன்களை எடுத்தாலும், இந்திய பெளலர்கள் ஆல்அவுட் செய்ய தவறவில்லை.

பின்னர் ஆடிய இந்தியா, பிட்ச் மாறிய சூழலில் 337 ரன்களை எடுத்தது. பிறகு, நான்காம் நாளில் பிட்ச் பெரியளவில் மாறிய சூழலில், இங்கிலாந்தால் எடுக்க முடிந்தது 178 ரன்கள் மட்டுமே! 1.25 நாளுக்கும் குறைவாக ஆட்டம் மிச்சமிருந்தாலும், முன்னிலை நிலவரம் 400ஐ தாண்டிய பிறகும்கூட, இங்கிலாந்திற்கு டிக்ளேர் செய்யும் தைரியம் வரவில்லை.

பிறகு 420 என்ற பெரிய டார்க்கெட்டை மோசமான பிட்சில் விரட்டிய இந்திய அணி, இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த ரன்களைவிட கூடுதலாகவே(192) எடுத்தது.

ஆக, மொக்கையான ஒரு பிட்சில், டாஸிலும் தோற்று, இந்தியா அடைந்த தோல்வி அது!

இப்போது இரண்டாவது டெஸ்ட்டிற்கு வருவோம். இந்திய அணி சார்பில், முதல் நாளிலிருந்தே பந்துகள் திரும்பும் வகையிலான பிட்ச் கேட்டு வாங்கப்பட்டது. அப்படியான நிலையில், டாஸ் வென்றாலும்கூட, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா, துவக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தது.

ஆனாலும், இந்தியா சார்பில் 1.5 சதம் மற்றும் 2 அரைசதங்கள் அடிக்கப்பட்டன. ஆனால், பின்னர் ஆடிய இங்கிலாந்தோ, இந்திய எண்ணிக்கையில்(329) பாதியைக்கூட தொட முடியாமல் 134 ரன்களுக்கே எளிதாக காலியானது. அதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், ஒரு சதம் & ஒரு அரைசதம் அடிக்கப்பட்டது. ரன்களும் 286 என்ற கவுரவமான எண்ணிக்கை!

இலக்கு 482 என்று நிர்ணயிக்கப்பட்டது. டார்க்கெட் 400ஐ தாண்டியும், இந்தியா டிக்ளேர் செய்யாததன் காரணம், ஆட்டம் 2 நாட்களுக்கும் மேலாக பாக்கியிருந்ததும், இங்கிலாந்தை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதும்தான்!

இப்போது ஆடிய இங்கிலாந்து, 164 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து சார்பில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்‍லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் டெஸ்ட்டில் இந்தியா தோற்றாலும், இந்தியா சார்பில் மொத்தம் 5 அரைசதங்கள் அடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இரண்டு அணிகளின் வெற்றிகளின் அடிப்படையில், எது சிறந்த வெற்றி? என்ற மதிப்பீட்டில், பல ஒப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்திய அணியின் வெற்றியே சிறப்பான வெற்றியாக கருதப்பட முடியும்..!