ராமண்ணா வியூவ்ஸ்:
 

ராமண்ணா
ராமண்ணா

பிரபல கட்சியின் முக்கிய புள்ளி அவர். சில சமயங்களில் என்னையும் அழைத்துக்கொண்டு புகழ் பெற்ற அந்த மவுண்ட் ரோடு கிளப்புக்குச் செல்வார்.   “தண்ணீர்” கரைபுரண்டோடும்.  இவருக்கு அந்தப் பழக்கம் இல்லை என்பதோடு, தன்னோடு வருபவர்களையும் அனுமதிக்க மாட்டார். அத்தனை நல்லவர். (எனக்கு “அந்தப்” பழக்கம் இல்லை என்பது வேறு விசயம்.)
இன்றும் அப்படித்தான்.  நாங்கள் இருவரும் ஒரு டேபிளில் அமந்தோம். அவர் சிக்கன் கபாப்.  நான் பன்னீர் புலாவ்.
அவருக்கும் எனக்கும் தெரிந்த நண்பர்கள் பலர் அங்கே இருந்தார்கள். அவ்வப்போது தங்கள் டேபிளில் இருந்து  இங்கு வந்து எங்களிடம் அளவளாவிச் சென்றார்கள்.. தள்ளாட்டத்துடன்.  எங்கள் இருவருக்கும் தெரிந்த உளவுத்துறை அதிகாரி ஒருவரும் அங்கே காணக்கிடைத்தார்.
அருகில் வந்தவர், எங்கள் பக்கத்து சேரிலேயே அமர்ந்து அரட்டையில் கலந்துகொண்டார். பல திசை மாறிய பேச்சு, வரும் சட்டமன்றத் தேர்தலில் வந்து நின்றது.  அவர் ஒரு கணிப்பைச் சொன்னார். நமது அரசியல் நண்பர் வேறொரு கணிப்பைச் சொன்னார்.  என்னிடம் கேட்டார்கள்.
தேர்தல் முடிவு குறித்து நான் சொன்னது இதுதான்:
“மிகச் சில தேர்தல்களில்தான் முடிவை முன்கூட்டியே கணிக்க முடியும். உதாரணம், 91 சட்டசபை தேர்தல். அப்போது ராஜீவ் மரணம், அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை அமோக வெற்றி அடையச் செய்தது. அதே போல 96ம் ஆண்டு தேர்தல். ஜெயலலிதா மீதான மக்களின் அதீத கோபம் வெளிப்பட்ட தேர்தல் அது.
மற்றபடி பெரும்பாலான தேர்தல்களில் தேர்தல் முடிவை முன்கூட்டியே கணிக்க முடியாது. தனி நபர்களால் மட்டுமல்ல.. கருத்துக்கணிப்புகளாலும் முடியாது.
சில நாடுகளில்… பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை படித்து ஓட்டுப்போடும் மக்கள் உண்டு என்பர். ஆகவே அங்கு முன்னதாகவே கருத்துக்கணிப்பில் முடிவுகள் தெரிவதுண்டு.
இங்கு அப்படி கிடையாது. மக்களின் சோம்பேறித்தனம், அறியாமை என்று சொல்லிவிட முடியாது. தேர்தல் அறிக்கைகள் மீது மக்களுக்கு இருக்கும் மரியாதை அவ்வளவுதான்.
இங்கு ஓட்டளிக்க.. “ஜனநாயகத்துக்கு” ஒவ்வாத பல காரணிகள் உண்டு. சாதி, மதம், பணம் ஆகியன.
தேர்தல் நெருக்கத்தில் தூண்டப்படும் சாதி, மத உணர்வுகள் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. தவிர அச் சமயத்தில் சாதி, மதத்தைவிட பணமும் முக்கிய பங்கு வகிக்கும். யார் அதிகம் தருகிறார்களோ அவர்களே ஏமாற்றிவிடக்கூடாது என்கிற “நேர்மை” பெரும்பாலான மக்களுக்கு உண்டு.
ஆகவே யாருடைய பணம் மக்களிடம் “சரியாக”ச் செல்கிறது.. அதில் அதிகம் யார் தருகிறார்கள் என்பதெல்லாம் தேர்தலுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் நடக்கும் விசயம்.
தவிர, தாங்கள் யாருக்கு ஓட்டுப்போடுவோம் என்பதை பலரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அப்படிச் சொன்னாலும், அது சரியாக இருக்குமா என்பது தெரியாது. ஏனென்றால் பலர் முன்தீர்மானம் கொள்வதில்லை. அப்படி இருந்தாலும் அதில் உறுதியாக இருப்பதில்லை.
அதாவது தீவிர கட்சி அபிமானிகள் மட்டுமே முன் தீர்மானத்துடன் இருக்கிறார்கள். இவர்களது சதவிகிதம் குறைவே. கட்சி அபிமானம் இல்லாத பொதுமக்கள்தான் அதிகம். இவர்கள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள்.
அடுத்து முக்கிய விசயம்.. இந்த கருத்துக்கணிப்புகள். இவர்கள், தொகுதிக்கு பத்து பேரை கேட்டுவிட்டு அல்லது கேட்டதாக சொல்லிவிட்டு (தங்களது) கருத்துக்களை, கணிப்பாக வெளியிடுகிறார்கள்.
ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வரும் மக்களிடம் கருத்து கேட்டு. அதன் அடிப்படையில்  இன்ன கட்சி வெற்றி பெறும் என்று   சொல்லப்பட்ட கணிப்புகளே தவறாகப் போயிருக்கின்றன.
“அதெல்லாம் இருக்கட்டும்… வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும்…” என்கிறீர்களா…
அது தேர்தல் முடிவு வந்த பிறகுதான் தெரியும்.
இதுதான் யதார்த்தம்!”  –  இதுதான நான் சொன்ன கருத்து.
முழுவதும் கேட்ட அந்த உளவுத்துறை அதிகாரியும், அரசியல் புள்ளியும் மையமாக தலையை ஆட்டினார்கள். ஏற்றுக்கொண்டார்களா, நிராகரித்தார்களா என்பது தெரியவில்லை.