தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை? மத்தியஅரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கெடு

மதுரை,

மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எந்த இடத்தில் அமைக்கப்படும் என்ற விவரம் டிச.31க்குள் உறுதி செய்ய வேண்டும் என்று  மத்திய அரசுக்கு மதுரை  உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ்  என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே பல கட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ள நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்று காலை விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு பரிந்துரைத்த இடங்களை அதற்கான குழுவினர் ஆய்வு செய்து கூடிய விரைவில் முடிவு அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமைக்கப்படும், அது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை மத்திய அரசிடம் கேட்டு மதியம் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

பின்னர் மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக கால அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை  அமைவதற்கான இடத்தை டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு  மத்திய அரசுக்கு  கெடு விதித்தனர்.