விவாதிக்கப்பட வேண்டியது எந்த சர்க்கார்?: தொலைக்காட்சிகளுக்கு தி.மு.க. பிரமுகர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுரை

டிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின்  இசை வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தனது அரசியல் குறித்து கோடிட்டுக் காட்டும் விதமாக விஜய் பேசினார். இதையடுத்து நேற்று பிரபல செய்தித் தொலைக்காட்சிகளில், விஜய் பேச்சு குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் தி.மு.க. முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ். சிவசங்கர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

எஸ்.எஸ். சிவசங்கர்

அதில்எஸ்.எஸ். சிவசங்கர் குறிப்பிட்டிருப்பதாவது:

“இன்று தமிழகத்தின் புகழ் வாய்ந்த தொலைக்காட்சிகள் மூன்றும், ஒரு பொருள் குறித்து விவாதித்தன. அது “சர்க்கார்”.

சர்க்கார் விவாதிக்கப்பட வேண்டியது தான், உனக்கென்ன சங்கடம் எனக் கேட்பீர்கள்.

விவாதிக்கப்பட வேண்டியது ‘சர்க்கார்’ தான். ஆனால் அது ‘விஜய் அண்ணா சர்க்கார்’ அல்ல, ‘மோடி சர்க்கார்’. ஆமாம், அவர்கள் விவாதித்திருக்க வேண்டியது, மோடி சர்க்கார் குறித்து. ரஃபேல் குறித்து, விவசாயிகள் போராட்டம் குறித்து.

ரஃபேல் பிரச்சினை என்ன என்பதை கூட இந்த ஊடகங்கள் விவாதிக்க அல்ல, விளக்கக் கூட முன்வரவில்லை என்பது தான், மிக வருத்தமான விஷயம்.

இந்திய அரசு, விமானப் படைக்கு புதிய விமானங்கள் வாங்கத் திட்டமிட்டது. எப்போது என்றால், 2012 ஆம் ஆண்டில். அப்போது காங்கிரஸ் ஆட்சி. அப்போது தான் ரஃபேல் நிறுவனத்திடம் போர் விமானம் வாங்க முடிவெடுக்கப்பட்டது. இது ப்ரான்ஸ் நாட்டு நிறுவனம். அப்போது அமெரிக்கா, அய்ரோப்பா, ரஷ்யா நிறுவனங்களும் டெண்டரில் போட்டிக்கு வந்தன. ஆனால், டெண்டரில், ரஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

“சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் – தயாரிப்பாளர் கலாநிதி மாறன்

அப்போது, இந்திய விமானப் படையில் இருந்த விமானங்களுக்கு வயதாகிப் போயிருந்தன. அதனால் தான், புது விமானங்கள் வாங்கும் திட்டத்தில் காங்கிரஸ் அரசு இறங்கியது. அப்போது தான், டெண்டரில் ப்ரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனம் பங்கேற்றது. அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவர்களிடமிருந்து 18 விமானங்கள், தயார் நிலையில் வாங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அதல்லாமல், 108 விமானங்கள் இந்தியாவில் HAL நிறுவனத்தில் தயார் செய்யப்பட்டு வாங்க, டஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. HAL என்பது, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் என்னும் அரசு நிறுவனம். அந்த HAL நிறுவனம், டஸால்ட் நிறுவனத்தோடு இணைந்து 108 விமானங்கள் தயாரிப்பதே திட்டம்.

இதன் மூலம் டஸால்ட் நிறுவனத்திற்கு செலுத்துகிற தொகையில், போர் விமானம் தயாரிக்கிற தொழில்நுட்பத்தை HALக்காக சேர்த்து வாங்குவதாகத் தான் அர்த்தம்.

அதற்கு பிறகு HAL தயாரிக்கிற விமானங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனத்திற்கு விலை கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இது தான் மன்மோகன்சிங் அரசு காலத்தில் எடுத்த நடவடிக்கையின் பலன்.

ஆனால், “பெருந்தலைவர்” மோடி ஆட்சி அமைந்த உடன், காங்கிரஸ் காலத்து ஒப்பந்தத்தை தூக்கி எறிந்தார்.

எஸ்எஸ். சிவசங்கர் பதிவு

2016 செப்டம்பரில், இந்திய அரசு ப்ரான்ஸ் அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்தார். அதில் 36 போர் விமானங்களை வாங்க கையொப்பமிட்டார். ரூபாய் 58,000 கோடி மதிப்புள்ள, 36 விமானங்களை வாங்குவதற்கு தான் மோடி ஒப்பந்தமிட்டார்.

இந்தியா முழுதும் ஊழல், லஞ்சம் வியாபித்திருக்கிறது, அதை ஒழிக்க வந்த ‘காலதேவன்’ தான் தான் என பறைசாற்றிக் கொண்ட மோடி, தடுமாறி விழுந்த இடம் இது தான்.

முகேஷ் அம்பானி நடத்தும் தொழிலான பெட்ரோ கெமிக்கல் தொழிலில், வரியை தள்ளுபடி செய்த காரணத்தால், அரசுக்கு நஷ்டம். இது குஜராத்தில், மோடி முதல்வராக இருந்த போது நடந்தது. இதனால் அம்பானியின் நிறுவனத்திற்கு லாபம் என CAG அறிக்கை கொடுத்தது. அதை மோடி கண்டு கொள்ளவில்லை, பா.ஜ.க கவனம் கொள்ளவில்லை. காரணம், அப்போதே அவர்களுக்குள் இருந்த இணக்கம்.

இப்போது 2014ல், மோடி பிரதமராகி விட்டார். சும்மா இருக்கலாமா. முகேஷ் அம்பானியின் தம்பி, அனில் அம்பானி கடும் கஷ்டத்தில் இருக்கிறார் என்பது தெரிந்து மன வருத்தமுற்றார் மோடி. உதவிட எண்ணினார். “ரஃபேல்” நினைவுக்கு வந்தது.

அந்த 2016 செப்டம்பரில் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அனில் அம்பானியின் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்தது டஸால்ட் நிறுவனம்.

மோடி – அம்பானி (பின்னணியில் ரபேல் விமானம்)

இங்கு தான் பிரச்சினை துவங்கியது. இதைத் தான் குற்றம் சாட்டினார், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி. துவங்கிய 15 நாட்களில், அனில் அம்பானியில் நிறுவனத்திற்கு இவ்வளவு பெரும் ஒப்பந்தத்தை தூக்கி கொடுப்பது சரியா என்று கேள்வி எழுப்பினார்.

இன்று வரை பதில் இல்லை, பெருமதிப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடி அவர்களிடமிருந்து.

அரசு நிறுவனமான HAL , போர் விமானம் தயாரிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனியார் நிறுவனத்திற்கு, விலையும் உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பணம் இழப்பு. போர் விமானத்தின் தொழில் நுட்பத்தில் கோளாறு என்றால், இந்தியாவின் பாதுகாப்பிற்கே ஆபத்து. இது தான் மோடியின் “ரஃபேல்” பேரத்தின் பலன்.

# ‘ரஃபேல்’ மோடி ‘சர்க்கார்’ புகழ் பாடும் ஊடகங்கள் வாழ்க !” இவ்வாறு தனது பதிவில் எஸ்.எஸ். சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார்.