சென்னை:

மிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினி,  எந்த சிஸ்டம் சரியில்லை என விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த  அமைச்சர் ஜெயக்குமார்,  ரஜினி என்ன பொறியியல் பட்டம் பெற்றவரா என்றும் கேள்வி விடுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, நீட் தேர்வு குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது,

தமிழகத்தில்  “நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் இப்போதுவரை தமிழக அரசின் நிலைப்பாடு. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தவிரக்க  மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார். இருந்தாலும், மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டியதும் எங்கள் தலையாயக் கடமை. எனவே அதிலும் கவனம் செலுத்திவருகிறோம்” என்றார்.

மேலும் ரஜினியின் சிஸ்டம் சரியில்லை என்ற விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு,  “அ.தி.மு.க-வில் 1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். 1.5 கோடி புலிகள் என்றுகூட சொல்லலாம்.

அரசு மீது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அது தவறு என்றால் திருத்தி கொள்வோம் என்ற அவர், ரஜினி  சொல்லும் விதம் சரியில்லை. அவர் ஆன்மீக அரசியலைப் பின்பற்றுவதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை என்றார்.

ஆனால், நாங்கள் அண்ணா  எம்.ஜி.ஆர் வகுத்து கொடுத்த கொள்கைகளைப் பின்பற்றியே ஆட்சி செய்து வருகிறோம்.  ஏழைகள் நலனுக்கான ‘அண்ணாயிசம்’ கொள்கை எங்களுடையது. சாதி, மதம் பாகுபாடுகள் இல்லாமல் சமூக நீதியை பேணி காப்போம் என்றார்.

மேலும்,   ரஜினி ஆன்மீக அரசியலின் மூலம் ஒரு மத சார்புள்ள அரசை நிறுவ நினைக்கிறார். அது தமிழகத்தில் நடக்காது என்ற அமைச்சர், சிஸ்டம் சரியில்லை என்று பி.இ பட்டதாரிகள்தான் கூறுவார்கள், ஆனால்,  ரஜினி காந்த் கூறுகிறார்… அவர்  என்ன பி.இ பட்டதாரியா என்றும் கேள்வி எழுப்பினார்.

ரஜினி முதலில் தமிழகத்திற்கு தண்ணீரைக் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவுக்குச் சென்று சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.