மிழகத்தில் மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் நேற்று நடந்த டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் கூட் டத்தில் இறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதற்கான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்த லில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும், மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைத்ததோடு, 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். இதன்படி, மதுக் கடைகள் காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி துவங்கியது.  கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரம்  தெரிவித்ததாவது:
“தமிழகத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 700 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்பதற்காக மண்டல மேலாளர்களிடமிருந்து அதற்கான பரிந்துரை பட்டியல் கோரப்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையின் நிர்வாகத்துக்காக 35 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, 35 மாவட்ட மேலாளர்களும், அவர்களின் கீழ் உள்ள துணை மேலாளர்களும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
TASMAC
கோயில், சர்ச், மசூதி போன்ற வழிபாட்டுதலங்கள், பள்ளிகள்,  போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில்  உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், கணக்கிடப்பட்டன. அதே போல மக்கள் எதிர்ப்பு அதிகமுள்ள பகுதிகள், விற்பனை குறைவான இடங்கள், கிராமப் புறங்கள், அருகருகே உள்ள கடைகள் என்கிற அடிப்படையில் மாவட்டத்துக்கு 10 முதல் 15 கடைகள்வரை கணக்கெடுக்கப்பட்டது. இதன்படி, 525 கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. .
இந்தப்பட்டியலிருந்து 500 கடைகளை தேர்வு செய்வதற்காக டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் நேற்று  மாலை நடந்தது.
இந்த ஆலோ சனைக்கூட்டத்தில், மூட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது.  இந்தப்பட்டியல் அரசிடம் இன்று  வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மூடப்படவேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் நாளை அல்லது மறுநாள் அறிவிக்கப்படும்” – இவ்வாறு டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.