பாட்னா

பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் நகரில் 104 குழந்தைகள் இறந்தது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே கிரிக்கெட் ஸ்கோரை கேட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மூளைக்காய்ச்சலால் 104 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இதனால் பீகார் மாநிலமே கடும் சோகத்தில் மூழ்கி உள்ளது. மாநில அரசு இது குறித்து சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மருத்துவமனைக்கு சென்ற போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே தலைமையில் நேற்று முன் தினம் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளது. அப்போது குழந்தைகள் மரனம் குறித்தும் மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்துக் கொண்டிருந்தது. அந்த போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதிக் கொண்டு இருந்தது. பீகார் மாநில சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே இந்த தீவிர விவாதத்துக்கு இடையில் “உலகக் கோப்பையில் இதுவரை எத்தனை விக்கட்டுகள் விழுந்துள்ளன?” என அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவர், “இதுவரை 4 விக்கட்டுகள் விழுந்துள்ளன.” என பதில் அளித்துள்ளார். குழந்தைகள் மரணம் குறித்த தீவிர விவாதத்தின் நடுவில் அந்த துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் இவ்வாறு கேட்டது மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது. அத்துடன் மத்திய அமைச்சர்களும் இது குறித்து ஒன்றும் சொல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.