திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிறை! ஸ்டாலின்

சூலூர்:

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரம் செய்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஊழல் செய்வதில் எடப்பாடி பழனிசாமியை விட கைதேர்ந்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி; திமுக ஆட்சிக்கு வந்ததும் எஸ்.பி.வேலுமணி சிறை செல்வது உறுதி என்று கூறினார்.

கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் தொகுதியில் வரும் 19ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித்தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  வாக்குசேகரித்து வருகிறார்.

சுல்தான் பேட்டை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,  தற்போது, தேர்தல் நேரம் என்பதால்தான்  பிரதமர் மோடி, ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா வுக்கு விரைந்து சென்று  நிவாரணத் தொகை அறிவிக்கிறார்… ஆனால்,  கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மோடி தமிழகம் வந்தாரா எனக் கேள்வி எழுப்பினார்.

வரும் 3ந்தேதி (ஜூன்) கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படும்போது தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடைபெறும் என்று கூறிய ஸ்டாலின்,  தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில்,  கடந்த எட்டு வருடத்தில் எந்தவொரு கூட்டு குடிநீர் திட்டமாவது அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதுண்டா எனக் கேள்வி எழுப்பினார்.

ஊழல் செய்வதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைவிட கைதேர்ந்தவராக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளங்குவதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் எஸ்.பி.வேலுமணி சிறை செல்வது உறுதி என்றார். அவர் செய்த ஊழல்களுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விவசாய நிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைத்து விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க அரசை விரட்டியடிக்கவும்  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.