டில்லி:

டோக்லாம் எல்லையில் இந்தியா தனது படைகளை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் சீனா தனது படைகளை குறைக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய சீன எல்லைப்பகுதியில் டோக்லாம் பகுதியில் சாலைப்பணிகளை துவங்கியவது சீனா. இதை இந்தியா எதிர்த்தது. இரு தரப்பிலும் இங்கு படைகள் குவிக்கப்பட்டன.

இன்னொரு புறம் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் டோக்லாம் எல்லையில் இந்திய துருப்புகளை குறைத்துக்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இது குறித்து இன்று இந்திய வெளியுறவு அமைச்சகம், “இந்தியாவும், சீனாவும் ராஜாங்க ரீதியிலான தகவல்தொடர்புகளை மேற்கொண்டு வந்தன. இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளும் தங்கள் பிரச்சினைகளையும், தேவைகளையும் எடுத்து கூறின. இதன் அடிப்படையில், டோக்லாம் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களை குறைத்துககொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்திருந்தது.

சீனாவும் தனது துருப்புகளை குறைக்கப்போவதாக முதலில் செய்தி வெளியானது.

ஆனால் தற்போது சீனா, நாட்டு ராணுவத்தை குறைக்கவில்லை என தெரிவித்துள்ளது. “தொடர்ந்து எல்லையில் ரோந்து பணியில் ஈடுபடுவோம். ஆனால் இந்திய தரப்பு ஏற்கனவே படைகளை குறைத்துக்கொண்டுள்ளது” என்று சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.