நெல்லை:

க்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, மக்கள் நீதி மய்யம் அறிமுகப்படுத்தி உள்ள விசில் செயலி நல்ல ஆயுதம் என்றும், அது தமிழகத்தை செதுக்கும் உளி என்றும் கமல் நெல்லை பகுதியில் பேசினார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இன்று காலை 9 மணிக்கு தனது பயணத்தை நெல்லை சீமையில் தொடங்கி உள்ளார்.  நெல்லை அருகே மேலப்பாளையம் மற்றும் நெல்லை டவுன் பகுதியில் வேனில் நின்றபடியே பொதுமக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, மக்கள் நீதி மய்யம் அறிமுகப்படுத்தி உள்ள விசில் செயலி… வெறும் செயலி அல்ல… தமிழகத்தை செதுக்கும் உளி, மக்களுக்கு நல்ல ஆயுதம் என்று கூறினார். மேலும், இந்த ஆயுதத்தை  தமிழ்நாட்டிற்காக பயன்படுத்துங்கள் என்றும், பாரதி பேசிய இடத்தில் நின்று இன்று  அரசியல்வாதியாக பேசுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் நெல்லை டவுனில் கமல் பேசினார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களிடையே உரையாற்றினார். அதைத்தொடர்ந்த இன்று நெல்லை மாவட்டத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.

தற்போது நெல்லை டவுனில் மக்களிடையே உரையாற்றி வரும் கமல் தொடர்ந்து,  ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன் கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார்.