சென்னை:

 புனேயில் நாளை நடைபெற உள்ள  சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ள போட்டியை காண  சென்னையை சேர்ந்த 1000 சிஎஸ்கே ரசிகர்களை தனி ரெயில் மூலம் புனேவுக்குஅழைத்து சென்றது சிஎஸ்கே நிர்வாகம்.

காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, 7 போட்டிகள் சென்னையில் நடைபெற இருந்த நிலையில், ஒரு போட்டி மட்டுமே பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மற்ற 6 போட்டிகளையும் புனேவுக்கு மாற்றி ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், நாளை புனே மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழக ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று சிஎஸ்கே நிர்வாகம், நாளை நடைபெற உள்ள போட்டியை காண  புனேக்கு செல்ல சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு நன்கொடையாக போட்டியை காண டிக்கெட்டும் வழங்கி உள்ளது.

இந்த சிறப்பு ரெயிலுக்கு‘‘விசில்போடு’’ எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டது. இந்த ரெயில் இன்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து புனேவுக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமுடனும், உற்சாகமுடன் பயணம் மேற்கொண்டனர்.

இந்த ரெயில் நாளை  காலை 8.30 மணிக்கு புனே சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தமிழக ரசிகர்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

விளையாட்டு முடிந்ததும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை இதே ரெயில் மீண்டும் புனேயில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறது.