‘விசில் போடு’… ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சாதனைகள்…

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 3முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில்,  ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.  சிறந்த கேப்டனாகவும்,  சிறந்த விக்கெட் கீப்பராகவும் இருந்து, அதிக கேட்ச், ஸ்டம்பிங் சாதனையும் படைத்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடராகும்.  ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த போட்டி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப் பட்டது.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உதவியுடன் நடைபெற்று வரும் இந்த போட்டி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

12 சீசன்களை கொண்ட ஐபிஎல் போட்டிக்கு இந்தியா முழுவதும் எட்டு மாநிலங்கள் சார்பாக  எட்டு அணிகளைக் கொண்டுள்ளது. உலக அளவில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டதும் ஐபிஎல்டி20 லீக் போட்டி என்பதும் சாதனைக்குறியது.

ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை அணியான,  சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறார் தல தோனி.

தற்போது 39 வயதை எட்டியுள்ள மகேந்திரசிங் தோனி, சிஎஸ்கே அணிக்காக 3 முறை கோப்பை வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 2010, 2011 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று சென்னை ரசிகர்களை விசில் போட வைத்தவர் தோனி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளன.  இதுவரை நடை பெற்றுள்ள 11 லீக் தொடரிலும், களமிறங்கிய போட்டிகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளது மட்டுமல்லாமல், 100 போட்டிகளில் வென்றும் சாதனை படைத்துள்ளார்.

ஆட்டத்தின்போது, மிடில்-ஆர்டரில் களமிறங்கும் தோனி, பேட்டை சுழற்றி எப்போது  ஹெலி காப்டர் ஷாட் அடிப்பார் என அவரது ரசிகர்கள் வையில் கையை வைத்து விசில் அடிக்க காத்துக்கொண்டிருப்பதும், அவர்களது ஆசையை நிறைவேற்றி வைத்தும் ரசிகர்களிடையே பிரமிக்கத்தக்க ஆதரவை பெற்றவர் தோனி.

கடந்த 2009 ஆம் ஆண்டில்,  டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3வது ஆளாக களமிறங்கிய தோனி,   37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தது, ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் களிடையே விசில் பறக்க வைத்தது.

அதுபோல, 2013ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியின்போதும் அரை சதம் அடித்து, சிஎஸ்கே அணியை  தகுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.

2010ம் ஆண்டு பஞ்சாபிற்கு எதிராக 5வது இடத்திலும், 2013 ஐபிஎல் இறுதிப் போட்டியில் 7 வது இடத்தில் களமிறங்கி அரை சதம் அடித்தார் தோனி, 2018ம் ஆண்டின்போது, பெங்களூருவிற்கு எதிராகவும் 6வது இடத்திலும் பேட்டிங் செய்து அரை சதம் அடித்திருந்தார்.

இதன் காரணமாக,  5 வரிசைகளில் அரை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்த மானவர் மகேந்திர சிங் தோனி.

அதுபோல,  ஸ்டம்புகளுக்கு பின்னால் பந்தை விரைவாக பிடித்து விக்கெட்டை எடுப்பதிலும் சாதனை படைத்தவர்,  பேட்ஸ்மேன்கள் கோட்டை தாண்டினால், அவர்களால் மீண்டும் கோட்டிற் குள் திரும்ப முடியாத அளவுக்கு பயத்தை ஏற்படுத்துபவர் தோனி. எப்போதும் ஸ்டம்புகளுடன் நெருக்கமாக இருக்கும்,  விரைவாக ஸ்டம்பிங் மற்றும் ரன்-அவுட்களைச் செய்வதிலும் வல்லவர்.

ஐபிஎல் வரலாற்றில், அதிக போட்டிகளில் அடியது மட்டுமல்லாமல், இதுவரை   94 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங்ஸுடன், அதிக வீரர்களை ஆட்டமிழக்க வைத்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை பெற்றவரும் தோனி ஒருவரே.

அதுபோல கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளை வென்று சாதனை படைத்த கேப்டனும் தோனி ஒருவரே.

தோனியின் தலைமையின் கீழ் விளையாட இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும்  ஆட விரும்புவதும் அசாதாரணமானது.  பிராவோ, டு பிளெசிஸ், பிரெண்டன் மெக்கல்லம் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் தோனியின் அமைதியான கேப்டன் ஷிப்பை பெருமையுடன் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவருன் இணைந்து விளையாடியும் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று (2020 ஆகஸ்டு 15)  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து ஒதுங்கிய தோனி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன்சியில் இருந்தும் விலகியது குறிப்பிடத்தது.

இருந்தாலும், தோனி  சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகிளில் களமிறங்கி கலக்குவார்  என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.