பிரதமர் மோடி, ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரை அன்பாலோ செய்த அமெரிக்கா…!

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், பிரதமர் மோடியை அன்பாலோ செய்து இருக்கிறது.

22 மில்லியன் பாலோயர்களை கொண்டது அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை டுவிட்டர் பக்கம். இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்புறவை பிரதிபலிக்கும் விதமாக பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் ஆகிய டுவிட்டர் கணக்குகளை பின் தொடர்ந்தது.

இதன்மூலம் வெள்ளை மாளிகை பின்தொடர்பவர்களில் அமெரிக்கர்கள் அல்லாத கணக்குகளாக இவை இடம்பெற்றன. இந்நிலையில், தற்போது மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்குகளை அன்பாலோ செய்துள்ளது.

தற்போது வெறும் 13 கணக்குகளை மட்டுமே பின்தொடர்கிறது. அவை அனைத்தும் அமெரிக்க நிர்வாகத்திற்கும், அதிபர் டிரம்புக்கும் தொடர்புடையவை ஆகும்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்து அமெரிக்காவிற்கு இந்தியா உதவியபோது, பாலோ செய்த வெள்ளை மாளிகை, உதவி கிடைத்ததும் தற்போது அன்பாலோ செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.