ஜெனிவா: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, அந்த வைரஸ் தாக்கத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்காக சீன அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

சீனாவில் வைரஸ் தாக்கம் குறைவதற்கு ஜி ஜின்பிங் அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது. கடந்த ஜனவரியில், ஹூபய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தபோது அந்நகர் முழுவதும் மூடப்பட்டது.

அங்கு வசித்துவந்த 1.1 கோடி மக்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஹூபய் மாகாணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சேவையை வழங்க 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெறும் 10 நாட்களில் 2,300 படுக்கைகளுடன் இரண்டு புதிய மருத்துவமனைகளை கட்டிமுடித்து, உலக நாடுகளை திரும்பப் பார்க்க வைத்தது சீன அரசு. வைரஸ் பாதிப்பைக் கண்டறிய, பொது இடங்களில் பரிசோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சீன அரசின் இந்த நடவடிக்கைகளால் அந்நாட்டில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம், கொரோனா தடுப்புகள் தொடர்பான சீனாவின் முயற்சிகளை பாராட்டியுள்ளது. அதன் தலைவர் டெட்ரோஸ் அடனோம் கெப்ரேயேசஸ், ”கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவந்து சீனா அடைந்துள்ள வெற்றியானது, இதர நாடுகளுக்கு நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது” என்றார்.