தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் நீக்கம்? பள்ளி கல்வித்துறை

சென்னை,

குதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளி ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது ஆசிரியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். இவர்கள்  5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவில்லை. இதனால் அவர்கள் தேர்வு பற்றி கவலைப்படாமல் இருந்து வந்தனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் 29, 30ந்தேதிகளில் டெட் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில்,  ஏற்கனவே தேர்வு எழுதாக 3000 ஆசிரியர்களும், இந்த ஆண்டு நடைபெறும் தேர்வை எழுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை சார்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில்,  இதுவரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இது தான் கடைசி வாய்ப்பு. இந்த முறை தேர்ச்சி பெறவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்க, பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.