ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்… யார்? இன்று மாலை ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அதிமுக சார்பில் 3 பேர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ள நிலையில், போட்டியிடும் ராஜ்ய சபா வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல் நாளை (6ந்தேதி) தொடங்க உள்ள நிலையில், இன்று வேட்பாளர்களின் பெயரை அதிமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறிது.

தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த சசிகலா, புஷ்பா, செல்வராஜ், முத்து கருப்பன், விஜிலா சத்தியானந்த்; தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பதவி காலம் ஏப்ரல் 2ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி,  மார்ச் 26ல் தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில்,  இன்று மாலை அனைத்திந்திய அண்ணா தி.மு.க வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கூடுகிறது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆட்சிமன்றக் குழு தேர்ந்தெடுக்கும். வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் ராஜ்யசபா உறுப்பினர் பதவி  கேட்டு தேமுதிக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாஜக தரப்பில் இருந்தும் அதிமுகவுக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது… இதன் காரணமாக இன்று அதிமுக வெளியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பதை காண அரசியல் கட்சிகள், அதிமுகவினர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.